புழல் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 32 மில்லி மீட்டர் மழை பதிவு


புழல் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 32 மில்லி மீட்டர் மழை பதிவு
x

சென்னை புறநகர் பகுதிகளில் பெய்து வரும் மழையால் புழல் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 32 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதனால் ஏரிக்கு 300 கனஅடி நீர் வந்து உள்ளது.

திருவள்ளூர்

புறநகர் பகுதிகளில் மழை

சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே இரவு நேரங்களில் ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. குறிப்பாக பூண்டி ஏரிக்கு 55 கனஅடி நீர் வந்து உள்ளது.

அதேபோல் பூண்டி ஏரியில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்துக்காக திறக்கப்படும் நீரை பொறுத்தவரையில் சோழவரம் ஏரிக்கு 49 கனஅடி, புழல் ஏரிக்கு 300 கனஅடி, கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை ஏரிக்கு 112 கனஅடி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு 14 கனஅடி நீர் வந்து உள்ளது.

புழல் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 32 மில்லி மீட்டர் அளவில் மழை பெய்து உள்ளது. சோழவரத்தில் 16 மில்லி மீட்டர், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகையில் 5 மி.மீ., செம்பரம்பாக்கத்தில் 4.6 மி.மீ., தாமரைப்பாக்கத்தில் 3 மி.மீ., கொரட்டூர் அணைக்கட்டு பகுதியில் 5 மி.மீ. மற்றும் நுங்கம்பாக்கத்தில் 20.2 மி.மீ., மீனம்பாக்கத்தில் 19 மில்லி மீட்டர் என்ற அளவில் மழை பதிவாகி உள்ளது.

தேர்வாய்கண்டிகை ஏரி நிரம்பியது

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 3 ஆயிரத்து 291 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 610 மில்லியன் கன அடியும், 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 146 மில்லியன் கன அடியும், 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2 ஆயிரத்து 661 மில்லியன் கன அடியும், 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரியின் முழு கொள்ளளவான 500 மில்லியன் கன அடியை எட்டி நிரம்பி உள்ளது.

அதேபோல் 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 2 ஆயிரத்து 830 மில்லியன் கன அடியும் நீர் இருப்பு உள்ளது. இதுதவிர 1,465 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியில் 1,112 மில்லியன் கனஅடி நீர் நிரம்பி உள்ளது. இதன் மூலம் 7 ஆயிரத்து 859 மில்லியன் கனஅடி (7.8 டி.எம்.சி.) இருப்பு உள்ளது.

மேற்கண்ட தகவல்களை நீர்வள ஆதாரத்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story