மாவட்டத்தில் 33,610 பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர்
மாவட்டத்தில் 33,610 பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர்.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மாதம் 13-ந்தேதி தொடங்கி கடந்த 3-ந்தேதியும், பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கி நேற்று முன்தினமும் நிறைவடைந்தன. இந்தநிலையில் நேற்று காலை எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கியது.
திருச்சி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை எழுத 34,689 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் மாணவர்கள் 17,581 பேர், மாணவிகள் 17,108 பேர் அடங்குவர். இவர்களுக்காக 173 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் தனித்தேர்வர்களுக்கான 6 மையங்களும் அடங்கும்.
33,610 பேர் தேர்வு எழுதினர்
இந்தநிலையில் நேற்று நடந்த மொழிப்பாட தேர்வை மாணவர்கள் 16,647 பேர், மாணவிகள் 16,963 பேர் என்று மொத்தம் 33,610 பேர் எழுதினர். திருச்சி மத்திய சிறையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 40 கைதிகள் எழுதினர். காலை 10 மணி முதல் பகல் 1.15 மணி வரை தேர்வு நடைபெற்றது.
இதில் 10 மணி முதல் 10.10 மணி வரை வினாத்தாளை படிப்பதற்கு அவகாசம் கொடுக்கப்பட்டது. 10.10 மணி முதல் 10.15 மணி வரை விவரங்களை சரி செய்ய நேரம் ஒதுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 3 மணி நேரம் தேர்வு நடந்து முடிந்தது.
1,079 பேர் தேர்வு எழுதவில்லை
நேற்று நடந்த மொழிப்பாடத்துக்கான தேர்வை மாணவர்கள் 934 பேர், மாணவிகள் 145 பேர் என்று மொத்தம் 1,079 பேர் எழுத வரவில்லை. காப்பி அடித்தல், துண்டு சீட்டு வைத்து எழுதுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்க பறக்கும் படையினர் அவ்வப்போது சோதனை மேற்கொண்டனர்.
இந்த தேர்வை கண்காணிக்க 350 நிலையான மற்றும் பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தன. மேலும் 20 பேருக்கு ஒரு தேர்வுக்கூட கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டிருந்தனர். 9 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வினாத்தாள் கட்டு காப்பகத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உப்பிலியபுரம்
உப்பிலியபுரத்தை அடுத்த பச்சமலை டாப்செங்காட்டுப்பட்டியில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை முன்னிட்டு காலை 8 மணிக்கே வந்திருந்த மலைவாழ் மாணவர்கள், பள்ளி வளாகத்தில் அமர்ந்து, பாடங்களை படித்தனர். நேற்று நடந்த மொழிப்பாட தேர்வை 27 மாணவர்களும், 23 மாணவிகளும் எழுதினர்.