97 பயனாளிகளுக்கு ரூ.35 லட்சம் நலத்திட்ட உதவி; அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழங்கினார்


97 பயனாளிகளுக்கு ரூ.35 லட்சம் நலத்திட்ட உதவி; அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழங்கினார்
x

தென்காசியில் 97 பயனாளிகளுக்கு ரூ.35.56 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழங்கினார்.

தென்காசி

தென்காசியில் 97 பயனாளிகளுக்கு ரூ.35.56 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழங்கினார்.

ஆய்வு கூட்டம்

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்‌.ஆர். ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ஆகாஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வருவாய் துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்கள், 25 பயனாளிகளுக்கு முதியோர் உதவி தொகைக்கான ஆணைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பேருக்கு ரூ.26 ஆயிரம் மதிப்பிலான திறன் பேசிகள், மீன்வளத்துறை சார்பில் 60 பேருக்கு ரூ 7.30 லட்சம் மதிப்பில் குளிர்சாதன பெட்டிகள் மற்றும் மீன்பிடி வலைகள் என மொத்தம் 97 பயனாளிகளுக்கு ரூ.35.56 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழங்கினார்.

சிரமங்களை குறைக்க நடவடிக்கை

பின்னர் அவர் பேசியதாவது:-

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள பொறுப்பு அமைச்சராக தமிழக முதல்-அமைச்சர் என்னை நியமித்துள்ளார். தென்காசி மாவட்டம் நெல்லை மாவட்டத்தில் இருந்து பிரிந்த நிலையில் இன்னும் சில துறைகளுக்கான தலைமை அலுவலகங்கள் நெல்லை மாவட்டத்தில் இயங்கி வருகின்றன. இதனால் பொது மக்களுக்கும், அலுவலர்களுக்கும் பல சிரமங்கள் ஏற்படுகிறது. இத்தகைய நிர்வாக ரீதியான சிரமங்களை குறைக்க தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தற்போது பொதுமக்களும், அரசு அலுவலர்களும் விரும்பிய அரசாங்கம் நடைபெற்று வருகிறது. அனைத்து அரசு துறை அலுவலர்களும் அரசின் நலத்திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்வதில் சிறப்பாக செயல்பட வேண்டும். தென்காசி மாவட்டத்தின் வளர்ச்சி பணிகளுக்கு தேவையான நடவடிக்கைகள் தமிழக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்துகொண்டவர்கள்

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயினுலாப்தீன், எம்.எல்.ஏ.க்கள் பழனி நாடார், ராஜா, சதன் திருமலைகுமார், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் சிவபத்மநாதன், செல்லத்துரை, மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி போஸ், தென்காசி நகரசபை தலைவர் சாதிர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்து மாதவன் மற்றும் யூனியன் தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story