சேலத்தில்ஆசிரியர் தகுதி தேர்வு நாளை தொடங்குகிறது36 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்
சேலம் மாவட்டத்தில் நாளை தொடங்கும் ஆசிரியர் தகுதி தேர்வை 36 ஆயிரம் பேர் எழுதுகின்றனர் என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.
சேலம்,
கண்காணிப்பு குழுக்கூட்டம்
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-2 இணையவழி தொடர்பாக மாவட்ட தேர்வு கண்காணிப்பு குழுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பேசியதாவது:-
ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-2 நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 15-ந் தேதி வரை நடைபெறுகிறது. மாவட்டத்தில் வி.எஸ்.ஏ. பொறியியல் கல்லூரி, ஜெயராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சோனா கல்லூரி, வைஸ்யா கல்லூரி, பெரியசீரகாபாடி அன்னபூர்ணா பொறியியல் கல்லூரி, ஏ.வி.எஸ். பொறியியல் கல்லூரி, தேவியாக்குறிச்சி பாரதியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்பட 14 கல்லூரிகளில் கணினிகள் மூலம் நடைபெற உள்ளன. காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
36 ஆயிரம் பேர்
ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-2 தேர்வினை 36 ஆயிரத்து 113 பேர் எழுதுகின்றனர். தேர்வர்கள் காலை தேர்விற்கு 7.30 மணிக்குள்ளும், பிற்பகல் தேர்விற்கு 12.30 மணிக்குள்ளும் தேர்வு மையத்திற்கு வர வேண்டும். இந்த தேர்விற்காக மாவட்ட தேர்வுக் கண்காணிப்புக்குழு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-2 தேர்வை கண்காணிக்கும் வகையில் உதவி கலெக்டர்கள் மற்றும் தாசில்தார்கள் தலைமையில் 4 தேர்வு மையங்களுக்கு ஒரு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
தேர்வு மையங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள தேர்வுமைய பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், உதவி கலெக்டர்கள் விஷ்ணுவர்த்தினி, தணிகாஜலம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.