37 விவசாயிகளுக்கு மானிய விலையில் உழவு எந்திரம்
செம்பனார்கோவிலில் 37 விவசாயிகளுக்கு மானிய விலையில் உழவு எந்திரம்
பொறையாறு:
தமிழ்நாடு முழுவதும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் 2023-24-ன் படி தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகளுக்கு வேளாண்மை பொறியியல் துறை சார்பில் மானிய விலையில் 5 ஆயிரம் உழவு எந்திரம் (பவர் டில்லர்) வழங்கும் திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார். அதன்படி பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் வழங்கும் விழா செம்பனார்கோவில் வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடந்தது. விழாவிற்கு மயிலாடுதுறை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சேகர் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், ஒன்றியக்குழு தலைவர்கள் நந்தினி ஸ்ரீதர், மகேந்திரன், நாகை வேளாண்மை விற்பனை துறை துணை இயக்குனர் வெற்றிவேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் ஸ்ரீதர் வரவேற்றார். இதில் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 37 விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லரை வழங்கி பேசினார். விழாவில் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 25 ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு, ரூ.2.12 லட்சம் மதிப்பிலான பவர் டில்லர் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் ரூ.85 ஆயிரம் மானியத்தில், 37 பவர் டில்லர்கள் என மொத்தம் ரூ.30.85 லட்சம் மானியத்தில் வழங்கப்பட்டது. விழாவில் உதவி பொறியாளர் கீர்த்திவாசன், தி.மு.க.மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப பணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், அப்துல் மாலிக், அமுர்த விஜயகுமார் மற்றும் வேளாண்மை துறையினர் கலந்து கொண்டனர்.