37 ஆயிரத்து 568 பேர் குரூப்-4 தேர்வு எழுதினர்


37 ஆயிரத்து 568 பேர் குரூப்-4 தேர்வு எழுதினர்
x

ராமநாதபுரம் மாவட்டத்தில் குரூப்-4 தேர்வினை 187 மையங்களில் 37 ஆயிரத்து 568 பேர் எழுதினர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் குரூப்-4 தேர்வினை 187 மையங்களில் 37 ஆயிரத்து 568 பேர் எழுதினர்.

187 மையங்கள்...

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள 7 ஆயிரத்து 301 பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 தேர்வு அறிவித்து உள்ளது. 22 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள இதற்கான தேர்வுகள் நேற்று 7 ஆயிரத்து 689 மையங்களில் நடைபெற்றன. இந்த தேர்விற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் 44 ஆயிரத்து 238 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்காக மாவட்டத்தில் 187 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

ராமநாதபுரத்தில் 14 ஆயிரத்து 404 பேருக்கு 53 மையங்களும், கீழக்கரையில் 1,683 பேருக்கு 7 மையங்களும், கடலாடியில் 2ஆயிரத்து 518 பேருக்கு 12 மையங்களும், முதுகுளத்தூரில் 3 ஆயிரத்து 460 பேருக்கு 18 மையங்களும், கமுதியில் 3 ஆயிரத்து 336 பேருக்கு 15 மையங்களும், பரமக்குடியில் 12 ஆயிரத்து 767 பேருக்கு 57 மையங்களும், ஆர்.எஸ். மங்கலத்தில் 1,411 பேருக்கு 7 மையங்களும், திருவாடானையில் 2 ஆயிரத்து 37 பேருக்கு 8 மையங்களும், ராமேசுவரத்தில் 2 ஆயிரத்து 622 பேருக்கு 10 மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன. காலை 9.30 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரை நடைபெற்ற இந்த தேர்வில் கலந்து கொள்ள வந்தவர்கள் காலை 9 மணிக்கு மேல் அனுமதிக்கப்படவில்லை.

6,670 பேர் தேர்வு எழுதவில்லை

காலதாமதமாக வந்த சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து அதிகாரிகள் அனுமதியுடன் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மைய நுழைவு வாயிலில் விதிமுறைகளின்படி அனுமதிக்கப்பட்ட பொருட்கள் தவிர வேறு எதுவும் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். தேர்வு நடைபெற்றதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தேர்வு மைய பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பறக்கும்படையினர், அதிகாரிகள் குழுவினர் தேர்வு மையங்களுக்கு திடீரென்று சென்று ஆய்வு மேற்கொண்டனர். ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தேர்வு மையங்களுக்கு சென்று ஆய்வு செய்தார். இந்த தேர்வில் 37 ஆயிரத்து 568 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இது 84.92 சதவீதம் ஆகும். 6 ஆயிரத்து 670 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.


Related Tags :
Next Story