37-வது மெகா தடுப்பூசி முகாம்: தமிழகத்தில் 8.17 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் நேற்று நடைபெற்ற 37-வது மெகா தடுப்பூசி முகாமில் 8.17 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட 50 ஆயிரம் இடங்களில் நேற்று 37-வது சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதுவரை நடந்த 36 மெகா தடுப்பூசி முகாம்களில் 5 கோடியே 35 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
12-14 வயதுக்குட்பட்டவர்களில் இதுவரை முதல் தவணையாக 19 லட்சத்து 86 ஆயிரத்து 409 பேருக்கும் (93.65 சதவீதம்), 2-ம் தவணையாக 15 லட்சத்து 66 ஆயிரத்து 176 (73.84 சதவீதம்) பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல் 15-17 வயதுக்குட்பட்டவர்களில் இதுவரை முதல் தவணையாக 30 லட்சத்து 53 ஆயிரத்து 610 பேருக்கும் (91.26 சதவீதம்), 2-ம் தவணையாக 25 லட்சத்து 95 ஆயிரத்து 960 பேருக்கும் (77.58 சதவீதம்) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
8.17 லட்சம் பேருக்கு...
பூஸ்டர் தடுப்பூசியை பொறுத்தவரை 86 லட்சத்து 6 ஆயிரத்து 640 பேருக்கு (20.20 சதவீதம்) இதுவரை செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற சிறப்பு மெகா தடுப்பூசி முகாமில் 12 வயதுக்கு மேற்பட்ட 8 லட்சத்து 17 ஆயிரத்து 276 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
இதில் முதல் தவணையாக 28 ஆயிரத்து 285 பேருக்கும், 2-ம் தவணையாக 1 லட்சத்து 83 ஆயிரத்து 73 பேருக்கும், பூஸ்டர் தடுப்பூசி என்ற வகையில் 6 லட்சத்து 5 ஆயிரத்து 918 பேருக்கும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் தவணையாக 96.54 சதவீதமும், 2-ம் தவணையாக 91.37 சதவீதமும் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
மாநிலத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு மெகா தடுப்பூசி முகாமினை முன்னிட்டு இன்று (திங்கட்கிழமை) கொரோனா தடுப்பூசி பணிகள் நடைபெறாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.