அவலாஞ்சியில் 38 சென்டி மீட்டர் மழை கொட்டித்தீர்த்தது-கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் மண் சரிவு


தினத்தந்தி 26 July 2023 7:00 AM IST (Updated: 26 July 2023 7:01 AM IST)
t-max-icont-min-icon

அவலாஞ்சியில் 38 சென்டிமீட்டர் மழை பதிவானது. கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி

ஊட்டி

அவலாஞ்சியில் 38 சென்டிமீட்டர் மழை பதிவானது. கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பலத்த மழை

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக நீலகிரி கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இதனால் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் மப்பும் மந்தாரமுமாக பனி மூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் ஊட்டி- மேட்டுப்பாளையம் மற்றும் கோத்தகிரி சாலைகளில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்களை ஓட்டி சென்றனர்.

ஊட்டி சுற்றுவட்டார பகுதியில் அவ்வப்போது லேசாக சாரல் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. மேலும் அவலாஞ்சி, கூடலூர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்து வந்தது.

இதன்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் அவலாஞ்சியில் 38.2 சென்டிமீட்டர் மழை பதிவானது. மேலும் அந்தப் பகுதியில் கடும் காற்றுடன் கூடிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள மின் கம்பங்கள் சிலவற்றில் சேதம் அடைந்திருந்தால் மின்சாரம் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

அவலாஞ்சி பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக 171 அடி கொள்ளளவு கொண்ட அவலாஞ்சி அணையின் நீர்மட்டம் தற்போது 90 அடியாக உயர்ந்துள்ளது.

மண் சரிவு

குன்னூர் கண்டோன்மென்ட் வாரியத்திற்கு உட்பட்ட பாய்ஸ் கம்பெனி லோயர் குரூஸ்பெட் என்ற இடத்தில் மழை காரணமாக ஆபி என்பவரின் என்பவரது வீட்டு தடுப்பு சுவர் இடிந்து, கீழே உள்ள ஜான்சன் என்பவரது வீட்டின் மேல் விழுந்ததில் வீட்டின் மேற்புறம் சேதம் அடைந்தது.

இடிந்த வீட்டில் ராணுவ வீரர்களான முகேஷ், உத்தம், ஹர்மன், லோபிரித் ஆகியோர் வாடகைக்கு. தங்கியுள்ளனர் அவர்களுக்கு அதிர்ஷ்டவசமாக எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை.

குன்னூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டில் இருந்த பொருட்களை இடம் மாற்றினர். மேலும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டு உள்ளது, இது கண்டோன்மென்ட் பகுதிக்கு உட்பட்டது என்பதால் கன்டோன்மென்ட் நிர்வாக அதிகாரி வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

படகு சவாரி ரத்து

இதேபோல் ஊட்டியில் காலையில் இருந்து தொடர்ச்சியாக விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்ததால் ஊட்டி படகு இல்லத்தில் மிதி படகு மற்றும் துடுப்பு படகு சவாரி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

தாவரவியல் பூங்கா உள்பட ஒரு சில இடங்களில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்தது. நாள் முழுவதும் குளிர் அதிகமாக இருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

ஊட்டியில் இருந்து கிளன்மார்கன் செல்லும் வழியில் சாலையில் மரம் முறிந்து விழுந்தது. இதைத் தொடர்ந்து ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மரத்தை வெட்டி அகற்றினர்.

போக்குவரத்து பாதிப்பு

கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர்ந்து பல இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டு வருகிறது. நேற்று காலை 10.30 மணிக்கு கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடுவட்டம் ஆகாச பாலம் அருகே பெரிய கற்களுடன் கூடிய மண் சரிவு ஏற்பட்டது.

மேலும் மரங்களும் சரிந்து விழுந்தது. இதனால் கூடலூர்- ஊட்டி இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்த நடுவட்டம் போலீசார் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறையினர் விரைந்து வந்தனர். பின்னர் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் கொட்டும் மழையை பொருட்படுத்தாது மண் குவியல்களை அகற்றும் பணி நடைபெற்றது. பின்னர் சுமார் 1 ½ மணி நேரத்துக்கு பிறகு சாலையில் கிடந்த கற்கள், மண் குவியல்கள் அகற்றப்பட்டது.

வீடுகள் இடியும் அபாயம்

அதைத்தொடர்ந்து போக்குவரத்து சீரானது. இந்த சம்பவத்தால் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் மிக தாமதமாக புறப்பட்டு சென்றனர். இதேபோல் நடுவட்டத்திலிருந்து ஊட்டி செல்லும் பகுதியில் மழையுடன் பனிமூட்டமும் அடிக்கடி காணப்படுகிறது. இதனால் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகன ஓட்டிகள் இயக்கி வருகின்றனர்.

மேலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கடும் குளிர் நிலவுகிறது. இதனிடையே கூடலூர் அருகே தேவர் சோலை பேரூராட்சிக்குட்பட்ட காப்பூர்மூலாவில் இருந்து கங்கமூலா செல்லும் சாலையில் மச்சி கரை என்ற இடத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் ராஜன் என்பவரது வீடு இடிந்தது. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள 7 வீடுகள் இடியும் அபாயத்தில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் மின் கம்பமும் சரிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க மின்வாரிய துறையினர் அப்பகுதியில் மின் இணைப்புகளை துண்டித்தனர். இதனால் இரவில் இருளில் வசிக்கும் நிலை ஏற்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மண் சரிவுகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Related Tags :
Next Story