ரூ.38¾ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
ரூ.38¾ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
செம்பட்டு:
கம்பி வடிவில்...
திருச்சி விமான நிலையத்திற்கு விமானத்தில் வரும் சில பயணிகள் மூலம் தங்கம் கடத்தப்பட்டு வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த பயணி ஒருவர் கொண்டு வந்த பையின் மீது சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அதனை சோதனை செய்தனர். அப்போது கம்பி வடிவில் பையில் மறைத்துக் கொண்டு வந்த தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பெண் பயணி
இதேபோல் மலேசியாவில் இருந்து நேற்று மலிந்தோ விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பெண் பயணி ஒருவரை சோதனை செய்தபோது, அவர் தனது உள்ளாடையில் மறைத்து தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது. அதனையும், அவரிடம் இருந்த விலை உயர்ந்த செல்போனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2 பயணிகளிடம் இருந்தும் மொத்தம் ரூ.38 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான 646 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.