சேலம் ரெயில்வே கோட்டத்தில் நடப்பு ஆண்டில் ரூ.395 கோடி வருவாய்
சூரமங்கலம்:-
சேலம் ரெயில்வே கோட்டத்தில் நடப்பு ஆண்டில் ரூ.395 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்று சுதந்திர தின விழாவில் கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்கா கூறினார்.
சுதந்திர தின விழா
சேலம் ெரயில்வே கோட்டத்தில் 77-வது சுதந்திர தின விழா நடந்தது. விழாவில் கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்கா கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். விழாவில் கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்கா பேசும் போது கூறியதாவது:-
கடந்த ஆண்டு சேலம் ெரயில்வே கோட்டத்தில் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான வருவாய் ரூ.314 கோடியாக இருந்தது. நடப்பு ஆண்டு வருவாய் கடந்த மாதம் (ஜூலை) வரை ரூ.395 கோடியாக அதிகரித்துள்ளது, இது கடந்த ஆண்டை காட்டிலும் 26 சதவீதம் அதிகமாகும். சேலம் கோட்டத்தில் உள்ள 15 ரெயில் நிலையங்களை மறு சீரமைப்பு செய்ய ரூ.272 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
68 போலி முகவர்கள்
பாரத் கவுரத் ரெயில் திட்டத்தில் 12 பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு ரூ.4.25 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளன. ரெயில்வே பாதுகாப்பு படையினர் கடந்த ஆண்டு ஆகஸ்டு முதல் தற்போது வரை 5 ஆயிரத்து 317 பேர் மீது பல்வேறு விதிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 70 பேர் கைது செய்யப்பட்டு ரூ.4.6 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. 68 போலி முகவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.26.51 லட்சம் மதிப்புள்ள ரெயில் டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கலைநிகழ்ச்சிகள்
போதை பொருள், புகையிலை மற்றும் தங்கம், வெள்ளி ஆபரணங்கள் கணக்கில் வராத பணம் போன்ற பிற பொருட்களும் கைப்பற்றப்பட்டன. 8 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. காணாமல் போன 217 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். போத்தனூர், கரூர், மேட்டுப்பாளையம், ஈரோடு ஆகிய பணிமனைகளில் சோலார் பிளான்ட் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்கா பேசினார்.
விழாவில் சேலம் ரெயில்வே பாதுகாப்பு படை கமாண்டோக்களின் சாகச நிகழ்ச்சி, ெரயில்வே பாதுகாப்பு படை பிரிவின் நாய் சாகச நிகழ்ச்சி மற்றும் பள்ளி மாணவ- மாணவிகளின் யோகா, கராத்தே நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. மேலும் இதில் சிறப்பாக செயல்பட்ட பிரிவுகளுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் சேலம் ரெயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம், ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் கவுரவ் குமார் மற்றும் ரெயில்வே அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்,