குறை தீர்க்கும் கூட்டத்தில் 396 மனுக்கள் குவிந்தன


குறை தீர்க்கும் கூட்டத்தில் 396 மனுக்கள் குவிந்தன
x

சிவகங்கையில் குறை தீர்க்கும் கூட்டத்தில் 396 மனுக்கள் குவிந்தன.நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

சிவகங்கை

சிவகங்கையில் குறை தீர்க்கும் கூட்டத்தில் 396 மனுக்கள் குவிந்தன.நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

குறை தீர்க்கும் நாள் கூட்டம்

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், சமூகப் பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் காமாட்சி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரெத்தினவேல், உதவி ஆணையர் (கலால்) கண்ணகி உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, வங்கிக்கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 396 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது தனிகவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியில் 10 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.

கூடுதல் தொகை

சிவகங்கை பையூர் பிள்ளை வயல் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் கலெக்டர் மதுசூதன்ரெட்டியிடம் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:-

பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கடந்த 2021-ம் ஆண்டில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிவகங்கை நகர் பகுதி பொதுமக்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டது. அப்போது பயனாளிகளின் பங்கு தொகையாக ரூ.1 லட்சத்து 58 ஆயிரத்து 350 செலுத்தப்பட்டது.

கடந்த 10 மாதமாக நாங்கள் அந்த வீடுகளில் வசித்து வருகிறோம். இந்த நிலையில் இந்த வீடுகளுக்கு பயனாளிகளின் பங்குத்தொகையாக ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 875 செலுத்தினால் போதும் என்று அறிவித்துள்ளார்கள். அரசின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

ஆனால் ஏற்கனவே வீடு பெற்ற பயனாளிகளின் பங்கு தொகையையும் இதே அளவிற்கு வசூலிக்க வேண்டும். இதன்படி ஏற்கனவே செலுத்திய பங்குத் தொகையில் இருந்து கூடுதலாக செலுத்தப்பட்ட ரூ.36 ஆயிரத்து 475-ஐ திரும்ப கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.


Related Tags :
Next Story