பஸ்சை மறித்து டிரைவரை தாக்கிய 4 பேர் கைது
பஸ்சை மறித்து டிரைவரை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பொன்மலைப்பட்டி:
திருச்சி தேவராயநேரியில் இருந்து சத்திரம் பஸ் நிலையம் நோக்கி தனியார் பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சை டிரைவர் துவாக்குடி அசூர் பகுதியை சேர்ந்த கதிரவன்(வயது 38) ஓட்டினார். அந்த பஸ்சுக்கு பின்னால் மதுரை அண்ணா நகர் வைகை காலனியை சேர்ந்த சதாம் உசேன்(31) என்பவர் தனது காரை ஓட்டி வந்தார். அப்போது காருக்கு வழிவிடாமல் பஸ் சென்றதால் ஆத்திரம் அடைந்த சதாம் உசேன், அரியமங்கலம் லட்சுமிபுரம் பஸ் நிறுத்தம் அருகே அந்த பஸ்சை வழிமறித்து நிறுத்தியுள்ளார்.
பின்னர் காரில் இருந்து இறங்கிய சதாம் உசேனும், அவருடன் வந்த வீரபாண்டியன்(19), முகமது ஹனிபா(20), உத்தரபிரதேசத்தை சேர்ந்த ராகுல்குமார் (20) ஆகியோரும் பஸ்சில் ஏறி டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, இரும்பு கம்பியால் அவரை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த டிரைவர் கதிரவன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின்பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து டிரைவரை தாக்கிய 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.