டீக்கடை ஊழியர்களை தாக்க முயன்ற 4 பேர் கைது
டீக்கடை ஊழியர்களை தாக்க முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகுடபதி (வயது 26). சம்பவத்தன்று இவர் தன்னுடைய நண்பர்களான பிரவீன் (27) மணிகண்டன் (25) மற்றும் ஹரிஹரன் (25) ஆகியோருடன் கடந்த 19-ந்தேதி இரவு சிவகங்கை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த நண்பரை பார்க்க சென்றனர். பின்னர் அவர்கள் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள டீக்கடைக்கு சென்று விற்பனையாளர்கள் சுவாமிநாதன் மற்றும் நாகராஜன் ஆகியோரிடம் ரூ.500 தரும்படி கேட்டுள்ளனர். மேலும் அந்த பணத்தை கூகுள் பே மூலம் போடுவதாக கூறியுள்ளனர். கடையில் இருந்தவர்கள் தர மறுத்து விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கடையில் இருந்தவர்களை தாக்கி கையில் வைத்திருந்த வாளால் வெட்ட முயன்றார்கள். இதை பார்த்த அங்கிருந்த கட்டுப்பாட்டு அறை போலீசார் சிவகங்கை நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே நகர் சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 4 பேரையும் கைது செய்தனர்.