ஆந்திராவில் இருந்து கன்டெய்னர் லாரியில் கடத்திய ரூ.4 கோடி கஞ்சா பறிமுதல்


ஆந்திராவில் இருந்து கன்டெய்னர் லாரியில் கடத்திய ரூ.4 கோடி கஞ்சா பறிமுதல்
x

ஆந்திராவில் இருந்து கன்டெய்னர் லாரியில் கடத்தி வந்த ரூ.4 கோடி கஞ்சாவை ஒரு தோட்டத்தில் நடத்திய சோதனையின் மூலம் போலீசார் கைப்பற்றி, அதில் தொடர்புடைய 6 பேரை கைது செய்தனர்.

மதுரை,

மதுரைக்கு அதிக அளவில் கஞ்சா கடத்தி வருவதாக கீரைத்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி தலைமையிலான தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் மதுரை சிந்தாமணி ரிங்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தபோது, காரின் பின்பகுதியில் 40 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் கார் டிரைவரை விசாரித்தபோது எல்லீஸ்நகர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 33) என்பது தெரியவந்தது.

2 ஆயிரம் கிலோ கஞ்சா

விசாரணையில் அவர் போலீசாரிடம் கூறும்போது, தனது கூட்டாளிகள் மூலம் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து கஞ்சா வாங்கி அதனை கன்டெய்னர் லாரியில் ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகில் உள்ள வேலவன் புதுக்குளம் கிராமத்தில் ராஜா என்பவரின் பொறுப்பில் உள்ள தோட்டத்தில் உள்ள கட்டிடத்தில் மறைத்து வைத்துள்ளோம். அங்கிருந்து 40 கிலோ கஞ்சாவை மதுரைக்கு கொண்டு வந்த போதுதான் சிக்கிக்கொண்டேன், என தெரிவித்துள்ளார்.

அதை தொடர்ந்து தனிப்படையினர் தூத்துக்குடி வேலவன் புதுக்குளம் கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பிற்குள் அதிரடியாக சென்று சோதனையிட்டனர். அங்கு மறைவான இடத்தில் கன்டெய்னர் லாரி நின்றிருந்தது. அதில் சோதனையிட்டபோது சாக்குமூடைகளில் ரூ.4 கோடி மதிப்பிலான சுமார் 2 ஆயிரம் கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

6 பேர் கைது

பின்னர் அங்குள்ள வீட்டில் பதுங்கியிருந்த 5 பேரை பிடித்து விசாரித்தபோது அதில் ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த சுகுமாறன் (27), தூத்துக்குடி ஜார்ஜ்ரோட்டை சேர்ந்த ராஜா (33), மில்லர்புரத்தை சேர்ந்த சுடலைமணி (21), முத்துராஜ் (24), தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த மகேஷ்குமார் (29) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், ஒரு சரக்கு வாகனத்தில் இருந்த 50 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சா கடத்தியதாக அவர்கள் 6 பேரையும் கைது செய்தனர்.


Next Story