ரூ.4½ கோடியில் நலத்திட்ட உதவிகள்


ரூ.4½ கோடியில் நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 14 Dec 2022 6:45 PM GMT (Updated: 14 Dec 2022 6:45 PM GMT)

ரூ.4½ கோடியில் நலத்திட்ட உதவிகளை சொக்கனூரில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர் சமீரன் வழங்கினார்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

ரூ.4½ கோடியில் நலத்திட்ட உதவிகளை சொக்கனூரில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர் சமீரன் வழங்கினார்.

மக்கள் தொடர்பு முகாம்

கிணத்துக்கடவு அருகே சொக்கனூரில் மக்கள் தொடர்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் பிரியங்கா முன்னிலை வகித்தார். சொக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரபு என்ற திருநாவுக்கரசு வரவேற்றார். முகாமிற்கு கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில் முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை 168 பேருக்கும், இலவச வீட்டுமனை பட்டா 109 பேருக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் 90 கழிப்பறைகள் கட்ட அனுமதி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் 6 பயனாளிகளுக்கு வங்கி கடனுதவி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 50 பயனாளிகளுக்கு சலவை பெட்டி, 3 பயனாளிகளுக்கு தையல் எந்திரம், கூட்டுறவு துறை மூலம் 12 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி உள்பட 720 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 53 லட்சத்து 64 ஆயிரத்து 985 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

58½ சென்ட் நிலம் தானம்

முன்னதாக பாலார்பதியை சேர்ந்த நந்தகுமார்-உமாவதி தம்பதியின் மகள் ஸ்ரீநிதி என்பவர் 58½ சென்ட் நிலத்தை ஏழை, எளிய மக்களுக்கு வீடு கட்ட தானமாக கலெக்டரிடம் ஒப்படைத்தார்.

அந்த சிறுமியையும், அவளது குடும்பத்தினரையும் கலெக்டர் பாராட்டி சால்வை அணிவித்து கேடயம் வழங்கினார். மேலும் வேளாண்துறை, தோட்டக்கலை துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் வைக்கப்பட்டு இருந்த கண்காட்சிகளையும் கலெக்டர் சமீரன் பார்வையிட்டார்.

இதில் ஊராட்சி உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) கமலக்கண்ணன், கிணத்துக்கடவு தாசில்தார் மல்லிகா, மண்டல துணை தாசில்தார் முத்து, ஆணையாளர் ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்(ஊராட்சிகள்) சிக்கந்தர் பாட்சா, கிராம நிர்வாக அலுவலர் மதுக்கண்ணன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story