தூத்துக்குடி: கார்கள் மோதி விபத்து - 4 பேர் படுகாயம்


கயத்தாறு அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.

தூத்துக்குடி:

சிவகாசியை சேர்ந்த கோகுல் (வயது 22) மற்றும் மதுரை திருநகரைச் சேர்ந்த அவரது நண்பர் பிரவின் (22) ஆகிய இருவரும் திருநெல்வேலிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். இதில் கோகுல் காரை ஓட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் சாத்தூரில் உறவினர் வீட்டிற்கு மொட்டை போடும் நிகழ்ச்சி சென்று விட்டு சென்னை செல்வதற்காக கல்லிடைக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவர் காரில் வந்தார்.

அப்போது கோகுல் ஓட்டி வந்த கார் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள கரிசல்குளம் விளக்கில் நாற்கரசாலையில் சென்ற போது மறு பக்கத்தில் சென்ற கார் மீது மோதியது. இதில் கார் சாலையில் இருக்கும் பாலத்தை தாண்டி 50 மீட்டர் பள்ளத்தில் தலைகீழாக விழுந்தது.

இதில் பலத்த காயமடைந்த பிரவின் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இனோவா கார் டிரைவர் ராஜா, காரில் வந்த விஜயலட்சுமி (60), ஜோதிலட்சுமி (44) ஆகிய மூவரும் காயமடைந்து கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து, சப் இன்ஸ்பெக்டர் ஆண்டோணிதீலீப் காசிலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story