விதிகளை மீறி இயக்கப்பட்ட4 ஆம்னி பஸ்கள் பறிமுதல்


விதிகளை மீறி இயக்கப்பட்ட4 ஆம்னி பஸ்கள் பறிமுதல்
x

நாமக்கல்லில் போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்பட்ட 4 ஆம்னி பஸ்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

நாமக்கல்

அதிகாரிகள் ஆய்வு

சென்னை போக்குவரத்து ஆணையர் உத்தரவின்படியும், நாமக்கல் கலெக்டர் உமா அறிவுரையின்படியும், ஈரோடு துணை போக்குவரத்து ஆணையர் சுரேஷ் தலைமையில், நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முருகேசன், முருகன் ஆகியோர் அடங்கிய குழுவினர், நேற்று முன்தினம் மாலை, 5 மணி முதல் நேற்று காலை 6 மணி வரை ஆய்வு மேற்கொண்டனர்.

ஆயுதபூஜையை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூல் செய்வதாக புகார் வந்ததையடுத்து, இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின் போது, ஆம்னி பஸ்கள் உரிய சாலை வரி செலுத்தாமலும், அனுமதி சீட்டு பெறாமலும் இயக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

4 ஆம்னி பஸ்கள் பறிமுதல்

இதையடுத்து, போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 4 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நாமக்கல் வடக்கு, தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. சம்பந்தப்பட்ட ஆம்னி பஸ்களில் வந்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் அதிக பாரம் ஏற்றி சென்ற 9 வாகனங்கள் உள்பட 67 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு, ரூ.2.85 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது. இந்த தொடர் சோதனை வருகிற 25-ந் தேதி வரை நடக்கும் என, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்தனர். இந்த ஆய்வின் போது மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், உமா மகேஸ்வரி, சரவணன், நித்யா, என்.ஆர்.சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story