கல்வராயன்மலையில்சந்தன மரத்தை வெட்டி மோட்டார் சைக்கிள்களில் கடத்திய 4 பேர் கைதுவனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
கல்வராயன்மலையில் சந்தன மரத்தை வெட்டி மோட்டார் சைக்கிள்களில் கடத்தி வந்த 4 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கச்சிராயப்பாளையம்,
ரகசிய தகவல்
கச்சிராயப்பாளையம் அருகே இயற்கை எழில் கொஞ்சும் கல்வராயன்மலை அமைந்துள்ளது. சேலம்-கள்ளக்குறிச்சி மாவட்டத்தை ஒட்டியுள்ள இந்த மலையில் சந்தனம், செம்மரம் உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் ஏராளமாக உள்ளன. இந்த நிலையில் கல்வராயன்மலை மட்டப்பாறை வனப்பகுதியில் உள்ள சந்தன மரங்களை சமூக விரோதிகள் சிலர் வெட்டி, நள்ளிரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் கடத்திச் சென்று சேலம், ஆத்தூர் பகுதிகளில் விற்பனை செய்து வருவதாக கள்ளக்குறிச்சி வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
வாகன சோதனை
அதன்பேரில் கல்வராயன்மலை இன்னாடு வன சரகர் சந்தோஷ்குமார் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை 4 மணியளவில் கல்வராயன்மலையில் உள்ள கள்ளக்குறிச்சி-சேலம் மாவட்ட எல்லை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் ஒரு சாக்கு மூட்டையுடன் வந்த 4 பேர், வனத்துறையினரை பார்த்ததும் திரும்பிச் செல்ல முயன்றனர். இதனால் சந்தேகமடைந்த வனத்துறை அதிகாரிகள் அவர்களை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்து சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தனர். அதில் 2 கிலோ எடையிலான சந்தன மரக்கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
4 பேர் கைது
அதைத்தொடர்ந்து வனத்துறையினர், அந்த நபர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள மண்மலை கிராமத்தை சேர்ந்த சாமுண்டி மகன் சக்திவேல், மாணிக்கம் மகன் முருகன், சுப்புராயன் மகன் ராமன், சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த முள்ளுவாடியை சேர்ந்த சின்னு மகன் ரவி ஆகியோர் என்பதும் மட்டப்பாறை வனப்பகுதியில் சந்தன மரத்தை வெட்டி விற்பனை செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் ஆத்தூருக்கு கடத்திச் சென்றபோது சிக்கிக் கொண்டதும் தெரியவந்தது.
இதையடுத்து வனத்துறையினர் சக்திவேல் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர்.
சந்தன மரக்கட்டைகள் பறிமுதல்
மேலும் அவர்களிடம் இருந்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள சந்தன மரக்கட்டைகள் மற்றும் அதனை கடத்த பயன்படுத்தப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சந்தன மரம் வெட்டி கடத்தப்படும் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? எனவும் வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். கல்வராயன்மலையில் சந்தன மரத்தை வெட்டி கடத்திய 4 பேரை வனத்துறையினர் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.