தாமிர கம்பிகளை திருடிய 4 பேர் கைது
தாமிர கம்பிகளை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெய்வேலி,
நெய்வேலி என்.எல்.சி.அனல் மின் நிலையம் 2-ல் நேற்று முன்தினம் இரவு மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள குடோன் பகுதியில் தாமிர கம்பிகளுடன் நின்ற 4 பேரை சந்தேகத்தின் பேரில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் பிடித்து நெய்வேலி தெர்மல் போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து பிடிபட்டவர்களிடம், போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் ஆதண்டார்கொல்லை பகுதியை சேர்ந்த சுப்பராயன் மகன் சதீஷ் (வயது 35), மந்தாரக்குப்பம் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த ஏசுராஜ் மகன் ஜான் பெர்னாண்டஸ் (31), பழைய தாண்டவன்குப்பம் பகுதியை சேர்ந்த காசிலிங்கம் மகன் பாலமுருகன் (31), தொப்ளிக்குப்பம் சந்திரன் மகன் குணசீலன் (22) என்பதும், அனல் மின்நிலையத்தில் இருந்து ரூ.56 ஆயிரம் மதிப்புள்ள தாமிர கம்பிகளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து சதீஷ் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தாமிரகம்பிகளையும் பறிமுதல் செய்தனர்.