விவசாயி உள்பட 4 பேர் சாவு


விவசாயி உள்பட 4 பேர் சாவு
x

வெவ்வேறு சம்பவங்களில் விவசாயி உள்பட 4 பேர் இறந்தனர்.

திருச்சி

வெவ்வேறு சம்பவங்களில் விவசாயி உள்பட 4 பேர் இறந்தனர்.

விவசாயி தற்கொலை

மண்ணச்சநல்லூர் காந்திநகர் 6-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 60). விவசாயி. நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று முன்தினம் இரவு வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை(விஷம்) குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதை கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் முதியவர் பலி

திருச்சி திருவளர்ச்சிப்பட்டி வடக்கு வீதியை சேர்ந்தவர் இடும்பன் (65). இவர் நேற்று முன்தினம் காலை திருச்சி-புதுக்கோட்டை சாலையில் திருவளர்ச்சிப்பட்டி அருகே சைக்கிளில் சாலையை கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியாக வந்த தனியார் பஸ் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த இடும்பனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருச்சி தெற்கு புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பஸ்சை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாமியாரை பார்க்க வந்த மருமகன் திடீர் சாவு

மணப்பாறை அருகே உள்ள கிருஷ்ணகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (31). இவர் அதே பகுதியில் உள்ள உணவகத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 28-ந் தேதி மணிகண்டம் அருகே நாகமங்கலம் பார்வையற்றோர் குடியிருப்பில் வசித்து வரும் உடல் நலம் பாதிக்கப்பட்ட மாமியார் செல்வி (63) என்பவரை பார்ப்பதற்காக மனைவி ரஞ்சனி மற்றும் குழந்தைகளுடன் வந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை கண்ணனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு திருச்சிஅரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்து விட்டார். இது குறித்த புகாரின்பேரில் மணிகண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதியவர் தற்கொலை

திருச்சி, சுப்பிரமணியபுரம், ஜெயில் கார்னர், கேசவன் நகரை சேர்ந்தவர் அந்தோணி (63). உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த இவர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை தின்று தற்கொலை செய்து கொண்டார். இது குறித்தப்புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story