பா.ஜனதாவினர் உள்பட 4 பேர் கைது


பா.ஜனதாவினர் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 24 Jun 2023 1:00 AM IST (Updated: 24 Jun 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

ரியல் எஸ்டேட் அலுவலகத்துக்கு தீ வைத்த வழக்கில் பா.ஜனதா கட்சியினர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்

ரியல் எஸ்டேட் அலுவலகத்துக்கு தீ வைத்த வழக்கில் பா.ஜனதா கட்சியினர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ரியல் எஸ்டேட் அலுவலகத்துக்கு தீ வைப்பு

கோவை ராமநாதபுரம் சண்முகாநகரை சேர்ந்தவர் அனிஹாரோன் (வயது 65). இவர் அந்த பகுதியில் தனக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் 4-வது மாடியில் குடியிருந்து வருகிறார்.

அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தரைத்தளத்தை உக்கடத்தை சேர்ந்த சிக்கந்தர் (42) என்பவர் வாடகைக்கு எடுத்து ரியல் எஸ்டேட் நிறுவன அலுவலகம் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி சிக்கந்தர் நடத்தி வந்த ரியல் எஸ்டேட் நிறுவன அலுவலகம் தீப்பிடித்து எரிந்தது.

அதை பார்த்த அனிஹாரோன் ஓடி வந்து, தீயை அணைக்க முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. இதுகுறித்த தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

4 பேர் கைது

இந்த தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்த புகாரின்பேரில் ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

அதில் பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினையில் சிக்கந்தரின் ரியல் எஸ்டேட் நிறுவன அலுவலகத் துக்கு 4 பேர் தீ வைத்தது தெரியவந்தது.

இந்த வழக்கில் தொடர்புடைய பா.ஜனதா கட்சியை சேர்ந்த மணியக்காரம்பாளையம் ரமேஷ் (34), வீரகேரளம் சபரிகிரிவாசன் (35), ராமநாதபுரத்தை சேர்ந்த அயோத்தி ரவி (43) மற்றும் உஸ்மான் (37) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

கடனை திரும்ப கேட்டதால் தகராறு

சிக்கந்தர், தனது நண்பர் உஸ்மானிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கி உள்ளார். அதை அவர் திருப்பி கேட்டபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த சிக்கந்தர், தனது நண்பர்களுடன் சேர்ந்து உஸ்மானை தாக்கி உள்ளார். இதனால் உஸ்மான், தன்னை தாக்கிய சிக்கந்தரை பழிவாங்குவது குறித்து தனது நண்பர்கள் ரமேஷ், சபரிகிரிவாசன், அயோத்திரவி ஆகியோரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து கடந்த 17-ந் தேதி அவர்கள் 4 பேரும் சேர்ந்து பணத்தை கேட்க சிக்கந்தர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிச்சென்று உள்ளனர். தற்போது அவர்கள் 4பேரும் கைதாகி உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story