விழுப்புரம் அருகே தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது


விழுப்புரம் அருகே தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 21 July 2023 6:45 PM GMT (Updated: 21 July 2023 6:46 PM GMT)

விழுப்புரம் அருகே தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்

வளவனூர்,

விழுப்புரம் அடுத்த வளவனூர் அருகே பா.வில்லியனூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெருமாள் மகன் ஹரிகிருஷ்ணன்(வயது 35), கூலி தொழிலாளி. இவருடைய பக்கத்து வீட்டில் உறவினர் ஆனந்தராஜ்(40) என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

ஆனந்தராஜ் வீட்டின் முன்பு பூவரச மரம் உள்ளது. இதில் காய்ந்த இலைகள் ஹரிகிருஷ்ணன் வீட்டின் முன்பு விழுந்து கிடந்துள்ளன. இதை பார்த்த ஹரிகிருஷ்ணன் நேற்று முன்தினம் ஆனந்தராஜிடம் சென்று கேட்டுள்ளார்.

கத்தியால் குத்திக்கொலை

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த ஆனந்தராஜ், தனது மனைவி விஜயா(35), 18 வயது, 16 வயது, 14 வயது மகன்களுடன் சேர்ந்து ஹரிகிருஷ்ணனை தாக்கினார். மேலும் ஆனந்தராஜ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து ஹரிகிருஷ்ணனை குத்தியதாக தெரிகிறது.

இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து விழுந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஹரிகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

4 பேர் கைது

இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினா்.

மேலும் இதுகுறித்து விஜயா உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தராஜ் மற்றும் அவரது மகன்கள் 3 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட சிறுவர்களை சீர்திருத்த பள்ளியில் அடைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இறந்த ஹரிகிருஷ்ணனுக்கு சிவசங்கரி என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் மகனும் உள்ளனர்.

விழுப்புரம் அருகே தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story