கல்லூரி மாணவர் கொலை வழக்கில் தந்தை, மகன் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை


கல்லூரி மாணவர் கொலை வழக்கில் தந்தை, மகன் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை
x

கல்லூரி மாணவரை வெட்டிக் கொன்ற வழக்கில் தந்தை, மகன் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கன்னியாகுமரி

நாகா்கோவில்:

கல்லூரி மாணவரை வெட்டிக் கொன்ற வழக்கில் தந்தை, மகன் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கல்லூரி மாணவர் கொலை

நாகர்கோவில் அருகே உள்ள திருப்பதிசாரத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மகன் லட்சுமணக்குமார் (வயது 21), நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 2-5-2015 அன்று அதே பகுதியில் நண்பர் வேலு என்பவருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் லட்சுமணக்குமாரை வழிமறித்து திடீரென அரிவாளால் சரமாரியாக வெட்டியது.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். அப்போது தடுக்க வந்த வேலுவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுதொடர்பாக திருப்பதிசாரத்தை சேர்ந்த திலீப் குமார் (33), அவருடைய சகோதரர் தினேஷ்குமார் (35), மணிகண்டன் (27) மற்றும் அவருடைய தந்தை திருவாழி (56) உள்பட 8 பேர் மீது ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கோவிலில் பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் காரணமாக மாணவர் லட்சுமணக்குமாரை கும்பல் தீர்த்துக்கட்டியது விசாரணையில் அம்பலமானது. இதைத் தொடர்ந்து 8 பேரும் கைது செய்யப்பட்டனர்.

4 பேருக்கு ஆயுள் தண்டனை

இதுதொடர்பான வழக்கு நாகர்கோவிலில் உள்ள கூடுதல் அமர்வு விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி ஜோசப் ஜாய் விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். அப்போது குற்றம் சாட்டப்பட்ட திலீப் குமார், தினேஷ் குமார், மணிகண்டன் மற்றும் திருவாழி ஆகிய 4 பேரையும் குற்றவாளி என தீர்மானித்து ஆயுள் தண்டனையும், ரூ.8 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மீதமுள்ள 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மதியழகன் ஆஜராகி வாதாடினார்.


Next Story