மாண்டஸ் புயல் எதிரொலி; மின்சாரம் தாக்கி 4 பேர் பலி
மாண்டஸ் புயல் காரணமாக ஏற்பட்ட மின்விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை
சென்னை மடிப்பாக்கம் ராம்நகர் 7 மெயின் ரோட்டில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த லட்சுமி, அவரது அண்ணன் மகன் ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
புயலின் போது குடிசை வீட்டிலிருந்த இவர்கள் பாதுகாப்பிற்காக மற்றொரு வீட்டு வாகனம் நிறுத்தும் இடத்திற்கு தஞ்சம் புகுந்து சென்ற நிலையில், தூங்குவதற்கு பாய் எடுத்து வரும்போது அறுந்து கிடந்த மின் கம்பியின் மீது இரண்டு பேரும் கால் வைத்ததால் இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் பகுதியில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை முடித்துவிட்டு வடமாநில இளைஞர்கள் இரண்டு பேர் திரும்பும் போது விபத்து ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.