சேலத்தில் பிரியாணி கடையில் சாப்பிட்ட பிறகு எலும்பு துண்டுகளை நாய்க்கு பார்சல் கட்ட சொன்னதால் தகராறு-4 பேர் கைது
சேலத்தில் பிரியாணி கடையில் சாப்பிட்ட பிறகு எலும்பு துண்டுகளை நாய்க்கு பார்சல் கட்ட சொன்னதால் ஏற்பட்ட தகராறில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சூரமங்கலம்:
பிரியாணி கடை
சேலம் ஜங்சன் மெயின் ரோடு முதல் கேட் அருகில் பிரபல பிரியாணி கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்கு சாப்பிட வந்தவருக்கும், கடை ஊழியர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே அது மோதலாக மாறியது. இதுதொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் வைரலானது.
இதனை அறிந்த சூரமங்கலம் போலீசார் அந்த கடைக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கடையில் தகராறில் ஈடுபட்ட 4 பேரை பிடித்து விசாரித்தனர்.
4 பேர் கைது
விசாரணையில், காசக்காரனூர் பகுதியை சேர்ந்த செந்தில்நாதன் (வயது 49) என்பவர் மதுபோதையில் பிரியாணி கடைக்கு சாப்பிட வந்ததாகவும், சாப்பிட்டு முடித்த பிறகு பிரியாணியில் இருந்த எலும்பு துண்டுகளை வீட்டில் உள்ள நாய்க்கு பார்சல் கட்ட சொன்னதாகவும் கூறப்படுகிறது. அப்போது பிரியாணி கடை ஊழியர்களுக்கும், செந்தில்நாதனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக செந்தில்நாதன், அவருடைய மகன் ரிஷிவரதன் (22), நண்பர்கள் ஹரி விக்னேஷ் (22), விஷால் (22) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.