மான்களை வேட்டையாடி கொன்ற 4 பேர் சிக்கினர்
மானூர் அருகே மான்களை வேட்டையாடி கொன்ற 4 பேர் சிக்கினார்கள்.
மானூர்:
மானூர் அருகே மான்களை வேட்டையாடி கொன்ற 4 பேர் சிக்கினார்கள்.
மான்கள் வேட்டை
நெல்லை மாவட்டம் மானூர் அருகே துலுக்கர்பட்டி பகுதியில் ஒரு உள்ள விவசாய தோட்டத்தில் நேற்று ஒரு கும்பல் மான்களை வேட்டையாடுவதாக மானூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது, அங்கு 4 பேர், 3 மான்களை வெட்டிக்கொன்று இறைச்சிகளை எடுத்துக் கொண்டு இருந்தனர்.
4 பேர் சிக்கினர்
இதையடுத்து போலீசார், 4 பேரையும் சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் துலுக்கர்பட்டியை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 42), மதுரையைச் சேர்ந்த ராமநாதன் (44), அழகுமாணிக்கம் (38) மற்றும் மணக்கரையைச் சேர்ந்த சங்கர் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவர்களிடம் இருந்து மான்களின் இறைச்சியும் பறிமுதல் செய்யப்பட்டது.
வனத்துறையினர் விசாரணை
இந்த சம்பவம் குறித்து நெல்லை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை அதிகாரி ஷான் நவாஸ்கான், ரேஞ்சர் சரவணக்குமார் மற்றும் வனத்துறையினர் மானூர் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். அவர்களிடம், பிடிப்பட்ட4 பேரும், இறைச்சிகளும் ஒப்படைக்கப்பட்டது. அவர்களிடம் வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.