பெல் ஊழியரின் வீட்டில் 4 பவுன் நகைகள் திருட்டு


பெல் ஊழியரின் வீட்டில் 4 பவுன் நகைகள் திருட்டு
x

பெல் ஊழியரின் வீட்டில் 4 பவுன் நகைகள் திருட்டுபோனது.

திருச்சி

நகைகள் திருட்டு

திருவெறும்பூர் அருகே பெல் நிறுவன குடியிருப்பு சி செக்டரை சேர்ந்தவர் ஜெயசீலன்(வயது 40). இவர் பெல் நிறுவனத்தில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 14-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு சுற்றுலா சென்று விட்டு நேற்று முன்தினம் காலை வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு, உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த சுமார் 4 பவுன் நகைகள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இது குறித்து ஜெயசீலன் அளித்த புகாரின்பேரில் பாய்லர் ஆலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோட்டார் திருடிய தம்பதி கைது

*பெரம்பலூர் மாவட்டம், டி.களத்தூர் பகுதியை சேர்ந்தவர் குமார்(42). இவர் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள அத்தானியில் கரும்பு ஜூஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்த பின்னர் எந்திரத்தை தார்ப்பாயால் மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை அங்கு வந்து பார்த்தபோது கரும்பு ஜூஸ் எந்திரத்தில் இருந்த மோட்டார் மற்றும் ஐஸ் பெட்டிகளை காணவில்லை. இது குறித்து மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராமன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி, மோட்டாரை திருடிய நாமக்கல் மாவட்டம், ஓலப்பாளையம் அருகே உள்ள நவனி பள்ளிப்பட்டியை சேர்ந்த கதிரவன்(35), அவரது மனைவி விஜயா ஜெரிதா(34) ஆகியோரை கைது செய்தனர்.

ஆர்ப்பாட்டம்

*மணப்பாறை பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பசு மற்றும் எருமைப்பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்த வேண்டும், ஐம்பது சதவீத மானியத்தில் தீவனத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

*மணப்பாறை பகுதியை சேர்ந்த ஒரு அண்ணன்-தம்பிக்கு பூர்வீக வீடு உள்ளது. இந்த வீட்டில் தற்போது தம்பி வசித்து வரும் நிலையில், அவரது அண்ணன் அந்த வீட்டில் தனக்கும் சம பங்கு உண்டு என்று கூறியுள்ளார். இதற்கு மறுத்து தம்பி வீட்டை பூட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த வீட்டின் முன்பு அவரது அண்ணன் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, புகார் அளிக்குமாறு கூறியதையடுத்து போராட்டத்தை கைவிட்டார்.

பட்டாக்கத்தியுடன் வந்த வாலிபர் கைது

*லால்குடி அருகே நல்லூர் வடக்கு தெருவை சேர்ந்த கோவிந்தராஜின் மகன் சின்னதுரை(29) மாடு வாங்குவதற்காக தனது உறவினர்களான அலுந்தலைப்பூர் செல்வராஜ்(55), நல்லூரை சேர்ந்த அழகர்(45). ஆகியோருடன் வரகுப்பை கிராமம் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது கொளக்காநத்தம் நோக்கி வந்த அரசு பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 3 பேரும் படுகாயமடைந்தனர்.

*திருச்சி ராம்ஜிநகர் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சன்னாசிப்பட்டி அருகே வந்த மொபட்டை நிறுத்தி, அதை ஓட்டி வந்த வாலிபரிடம் விசாரணை நடத்தி, சோதனை செய்தனர். இதில் மொபட்டில் பட்டாக்கத்தி இருந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் துறையூர் சோபனாபுரம் வீரபாண்டிய கட்டபொம்மன் தெருவை சேர்ந்த சூர்யா(22) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

*துவாக்குடி பகுதியில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தி, லாட்டரி சீட்டுகள் விற்ற மாரியப்பன், ஹரிஹரன் ஆகியோரை கைது செய்தனர்.

மீன் கடைகள் அகற்றம்

*லால்குடி அருகே வாளாடியில் சாலையோரத்தில் தரைக்கடைகள் அமைத்து மீன் விற்பனை நடைபெற்றது. இந்நிலையில் அப்பகுதியில் சிவன் கோவில் பின்னால் நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி நெடுஞ்சாலை, வருவாய்த்துறை மற்றும் போலீசார் நேற்று நெடுஞ்சாலையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றினர். மேலும் மீன் விற்றவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு, அந்த இடத்தில் பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டி விட்டு சென்றனர். இதனால் மீன் விற்பனை செய்ய நிரந்தர இடத்தை ஏற்படுத்த வேண்டும் என்று மீன் விற்பனையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story