பூங்காக்களில் 4 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது - சென்னை மாநகராட்சி


பூங்காக்களில் 4 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது - சென்னை மாநகராட்சி
x

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பூங்காக்களில் 4 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை மாநகராட்சி பகுதிகளில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 'பசுமை சென்னை' என்ற இலக்கை எட்டும் வகையில் பூங்காக்கள், பள்ளிகள், சாலையோரங்கள், திறந்த வெளிகள் ஆகிய பகுதிகளில் மரக்கன்று நடும் பணி நடந்து வருகிறது. அந்த வகையில், 2022-23-ம் நிதியாண்டில் அரசு சாரா நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மற்றும் சென்னை நதிகள் சீரமைப்பு திட்டத்தின் மூலமாக 2 லட்சத்து 59 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், 2023-24-ம் நிதியாண்டில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2 லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும் என்று சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதில், சென்னையில் உள்ள பூங்காக்கள், சாலையின் நடுப்புற பகுதிகளில் 4 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. இதற்காக ஆந்திர மாநிலம் ராஜ்முந்திரியில் இருந்து மரக்கன்றுகள் வாகனங்கள் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது. இதில், ஆலந்தூர் மண்டலத்துக்கு 2,500 மரக்கன்றுகளும், திரு.வி.க.நகர் மண்டலத்துக்கு ஆயிரம் மரக்கன்றுகளும், அம்பத்தூர் மண்டலத்துக்கு 500 மரக்கன்றுகளும் நடப்பட உள்ளது.

இதேபோல, தேவைக்கேற்ப மற்ற மண்டலங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. இதில், வேம்பு, நாவல், ஆலம் மற்றும் பாதாம் உள்ளிட்ட 20 வகையைச் சேர்ந்த மரங்கள் நடப்பட உள்ளது.

இதேபோல, ஒவ்வொரு மண்டலத்திலும் வாரத்திற்கு 10 பூங்காக்கள் தேர்வு செய்யப்பட்டு அதில் மரக்கன்றுகள் நடப்படும். ஒரு பூங்காவுக்கு 50 முதல் 100 மரக்கன்றுகள் வரை தேவைக்கு ஏற்ப நடப்படும். சென்னையில் உள்ள 536 பூங்காக்களிலும் புதிய வகையிலான மரங்கள் நடப்பட உள்ளது. இதன் மூலம் பசுமை சென்னை என்ற இலக்கை நாம் கூடிய விரைவில் எட்டிவிட முடியும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story