விதிமுறை மீறி இயக்கிய 4 வாகனங்கள் பறிமுதல்
திருச்செங்கோட்டில் விதிமுறை மீறி இயக்கிய 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
எலச்சிபாளையம்
திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரவணன் தலைமையில் திருச்செங்கோடு ஈரோடு செல்லும் சாலையில் வாகன சோதனை நடைபெற்றது. சோதனையின் போது அதிக பாரம் ஏற்றிய வாகனம் மற்றும் தகுதி சான்று புதுப்பிக்காத வாகனம் என 3 கனரக வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டது. மேலும் தகுதி சான்று புதுப்பிக்காமல் இயக்கிய ஆம்புலன்ஸ் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் கூறும்போது அவசரகால வாகனங்களின் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் அந்த வாகனங்களின் அனுமதி சான்று, காப்புச் சான்று, தகுதி சான்று, ஓட்டுநர் உரிமம் ஆகியவைகளை நடப்பில் வைத்திருக்க வேண்டும் எனவும், அவ்வாறு இல்லாமல் வாகனங்களை இயக்குவது கண்டறிந்தால் அந்த வாகனங்கள் சிறைபிடிக்கப்படும் என்றும் எச்சரித்தார். மேலும் கண்கள் கூசும் கூடுதல் முகப்பு விளக்குகள், அதிக ஒலி எழுப்பும் ஹாரன், பல வண்ண எல்.இ.டி. விளக்குகள், கூடுதல் பம்பர்கள் ஆகியவை வாகனங்களில் பொறுத்த கூடாது என்றும், அவ்வாறு இருந்தால் அவை அகற்றப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். சோதனையின் போது மோட்டார் வாகன ஆய்வாளர் பாமா பிரியா உடன் இருந்தார்.