கந்துவட்டி வசூலித்த 4 பெண்கள் கைது
விழுப்புரத்தில் கந்துவட்டி வசூலித்த 4 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்
விழுப்புரம் சாலாமேடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி சரளாதேவி (வயது 53). இவருக்கும் திண்டிவனம் தாலுகா கூட்டேரிப்பட்டை சேர்ந்த ரகுமாறன் மனைவி அஞ்சலை (42), சிங்காரவேல் மனைவி ரமணி (37), விக்கிரவாண்டி அருகே ஆசூரை சேர்ந்த வீரமணி மனைவி கவுரி (42), வளவனூர் சேகர் மனைவி சுசீலா (41) ஆகியோருக்கும் மகளிர் சுய உதவிக்குழு மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தின் அடிப்படையில் கடந்த 1½ மாதத்துக்கு முன்பு அஞ்சலை உள்ளிட்ட 4 பேரிடமும் சரளாதேவி ரூ.1 லட்சத்தை கடனாக வாங்கியிருந்தார். அந்த கடனுக்குரிய வட்டித்தொகையாக மட்டும் இதுவரை ரூ.1 லட்சத்தை அவர்களிடம் செலுத்தியுள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அஞ்சலை உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து சரளாதேவியிடம் சென்று இன்னும் ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்தை தர வேண்டும் எனக்கேட்டு அவரை திட்டியதோடு அவர் வைத்திருந்த ரூ.ஆயிரத்தை பறித்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து சரளாதேவி, விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் அஞ்சலை, ரமணி, கவுரி, சுசீலா ஆகிய 4 பேர் மீதும் தமிழ்நாடு அதிக வட்டி விதிப்பு தடுப்புச்சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.