4 ஆண்டுகள் கழித்து பதில் மனுதாக்கல்: தொடக்கக்கல்வி இயக்குனருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
4 ஆண்டுகள் கழித்து பதில் மனுதாக்கல்: தொடக்கக்கல்வி இயக்குனருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ரோகினி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "தனியார் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன். எனக்கு அரசு தரப்பில் பணி நியமன ஒப்புதல் வழங்கக்கோரி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தில் விண்ணப்பிக்கப்பட்டது. இந்த விண்ணப்பம் நீண்ட காலமாக கிடப்பில் உள்ளது. ஒப்புதல் கிடைக்காததால் சம்பளம் பெற முடியவில்லை. எனவே, பணி நியமன ஒப்புதல் வழங்க உத்தரவிட வேண்டும்" என்று கூறி இருந்தார்.
இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, பள்ளிக்கல்வித்துறை பதில் அளிக்க உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில், நீதிபதி பட்டுதேவானந்த் முன்னிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. விசாரணை முடிவில், ஐகோர்ட்டு உத்தரவிட்டும் 4 ஆண்டுகள் கழித்து தற்போது பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த பதிலும் திருப்திகரமானதாக இல்லை. எனவே, தொடக்கக்கல்வி இயக்குனருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த தொகையை வக்கீல்கள் நல நிதிக்கு 2 வாரத்துக்குள் செலுத்த வேண்டும். அரசுத்தரப்பில் அடுத்த மாதம் 13-ந் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.