ஊராட்சி மன்ற முன்னாள் பெண் தலைவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை


ஊராட்சி மன்ற முன்னாள் பெண் தலைவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை
x
தினத்தந்தி 22 Jun 2023 6:45 PM GMT (Updated: 23 Jun 2023 9:13 AM GMT)

கொல்லிமலையில் இலவச வீடு கட்டும் திட்டத்தில் காசோலை வழங்க ரூ.400 லஞ்சம் வாங்கிய வழக்கில் ஊராட்சி மன்ற முன்னாள் பெண் தலைவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

நாமக்கல்

ரூ.400 லஞ்சம்

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை செம்மேடு அருகே உள்ள நத்துகுழிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னையன் (வயது 53). இவர் கடந்த 2002-ம் ஆண்டு இந்திரா ஆவாஸ் யோஜனா இலவச வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டினார்.

இதற்காக அரசு சார்பில் வழங்கப்படும் காசோலையை பெற அப்போதைய குண்டூர்நாடு ஊராட்சி மன்ற பெண் தலைவரான பொன்னம்மாள் (60) என்பவரை அணுகினார். அங்கு காசோலையை வழங்க பொன்னம்மாள், சின்னையனிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டார். அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என கூறிய சின்னையன் ரூ.400 தருவதாக கூறி உள்ளார்.

இருப்பினும் லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத சின்னையன், இது குறித்து நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தெரிவித்தார். பின்னர் அவர்கள் கொடுத்த அறிவுரையின்படி கடந்த 2002-ம் ஆண்டு மே மாதம் 7-ந் தேதி தாம்பபாடி பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து லஞ்ச பணம் ரூ.400-ஐ சின்னையன், பொன்னம்மாளிடம் கொடுத்து உள்ளார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்சஒழிப்பு போலீசார் பொன்னம்மாளை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

4 ஆண்டுகள் சிறை

இது தொடர்பான வழக்கு நாமக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் ஊராட்சி மன்ற பெண் தலைவர் பொன்னம்மாளுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சாந்தி உத்தரவிட்டார்.

இதையடுத்து பொன்னம்மாளுக்கு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு உடல்நலக்குறைவு கண்டறியப்பட்டதால், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலேயே போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.


Next Story