ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி வீட்டில் 40 பவுன் நகைகள், பணம் திருட்டு


ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி வீட்டில் 40 பவுன் நகைகள், பணம் திருட்டு
x

சமயபுரம் அருகே ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி வீட்டில் 40 பவுன் நகைகள், பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருச்சி

சமயபுரம் அருகே ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி வீட்டில் 40 பவுன் நகைகள், பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கிராம நிர்வாக அதிகாரி

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள அகிலாண்டபுரம் வள்ளலார் நகர், ரெங்கா கார்டனை சேர்ந்தவர் குமார் (வயது 68). இவர் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு அருண், பிரபு என்ற மகன்கள் உள்ளனர்.

அருண் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். பிரபு திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புள்ளியியல் துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் திருமணமாகி தனது குடும்பத்தினருடன் திருச்சியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் உள்ள உறவினர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதை அறிந்து அவரை பார்ப்பதற்காக குமாரும் அவரது மனைவி சரஸ்வதியும் சென்றிருந்தனர்.

40 பவுன் நகைகள் திருட்டு

பின்னர், நேற்று காலை இருவரும் சென்னையில் இருந்து வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர். அப்போது வீட்டின் கதவு திறந்து இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது ஒரு அறையில் வைக்கப்பட்டு இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 40 பவுன் நகைகள் மற்றும் ரூ.35 ஆயிரம் ஆகியவை திருட்டுப் போயிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த குமார் இதுகுறித்து திருச்சி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் லால்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அஜய்தங்கம் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு

மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை ஆய்வு செய்தனர். இதுகுறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

வீட்டில் யாரும் இல்லை என்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் திட்டமிட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர் என்றும், தொடர்ந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருவதாகவும், விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்றும் துணை சூப்பிரண்டு அஜய்தங்கம் தெரிவித்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story