காரில் கடத்திய 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
பூதப்பாண்டி அருகே காரில் கடத்திய 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
நாகர்கோவில்,
குமரி மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன் குணசேகரன், ஏட்டுகள் கண்ணதாசன், மகேஸ்வரன் ஆகியோர் நேற்று காலையில் பூதப்பாண்டி அருகே தாழக்குடி- திருப்பதிசாரம் சாலையில் வீரநாரணமங்கலம் கண்டமேட்டு காலனி பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை வழிமறித்து சோதனை செய்தனர். சோதனையில் 10 பிளாஸ்டிக் சாக்குகளில் தலா 40 கிலோ வீதம் மொத்தம் 400 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த காரை ஓட்டி வந்த டிரைவர் தடிக்காரன்கோணம் நேருஜிநகரைச் சேர்ந்த ஜெபராஜை (வயது 37) பிடித்து விசாரித்தனர்.
இதில் ரேஷன் அரிசி மற்றும் காரின் உரிமையாளர் இந்த காருக்கு முன்னால் அதிகாரிகள், போலீசார் யாரும் நிற்கிறார்களா? என்று நோட்டமிட்டபடி ஸ்கூட்டரில் சென்ற தடிக்காரன்கோணம் இந்திராநகரைச் சேர்ந்த வில்சன் (52) என்பதும், காரில் இருந்த ரேஷன் அரிசியை அவர்கள் கேரளாவுக்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து வில்சனையும் போலீசார் பிடித்தனர். மேலும் அவர்கள் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து சொகுசு கார் மற்றும் ஸ்கூட்டரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் அவர்கள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-----