வேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் 400 போலீசார்


வேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் 400 போலீசார்
x

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி வேலூர் மாவட்டத்தில் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

வேலூர்

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி வேலூர் மாவட்டத்தில் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

பாபர் மசூதி இடிப்பு தினம்

பாபர் மசூதி இடிப்பு தினம் செவ்வாய்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி தமிழகம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக விமானநிலையங்கள், ரெயில் நிலையங்கள், முக்கிய கோவில்கள், வணிகவளாகங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்கும் பொருட்டு போலீசார் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவின்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. காட்பாடி ரெயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்யப்பட்டு, அதன்பின்னரே அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த பணியில் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர்.

பாதுகாப்பு பணியில் 400 போலீசார்

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி வேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் 400 போலீசார் ஈடுபட உள்ளனர். திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா பாதுகாப்பு பணியில் ஈடுபட 500-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு சென்றுள்ளனர். அதனால் மீதமுள்ள போலீசார் இங்கு பாதுகாப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர். மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ்நிலையங்கள், மார்க்கெட், வணிகவளாகங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் இன்று (திங்கட்கிழமை) காலை முதல் ஈடுபட உள்ளனர்.

மேலும் வெளி மாவட்டங்கள், பிறமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் மாநில மற்றும் மாவட்ட எல்லைகளான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, பத்தலப்பல்லி, பிள்ளையார்குப்பம், கண்ணமங்கலம் கூட்ரோடு அருகே, மாதனூர் அருகே ஆகிய பகுதிகளில் சோதனைக்கு உட்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

அதேபோன்று வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில், ஸ்ரீபுரம் தங்ககோவில், விரிஞ்சிபுரம் மார்கப்பந்தீஸ்வரர் ஆகிய கோவில்களுக்கு வரும் பக்தர்களின் உடமைகள் மற்றும் பொருட்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்படும். மேலும் இந்த கோவில்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள்.

மாவட்டம் முழுவதும் ரோந்து, கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணிகள் நாளை மறுதினம் (புதன்கிழமை) காலை வரை தொடரும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story