புதிதாக 4 ஆயிரம் பஸ்கள் விரைவில் வாங்கப்படும்-அமைச்சர் சிவசங்கர் பேட்டி


புதிதாக 4 ஆயிரம் பஸ்கள் விரைவில் வாங்கப்படும்-அமைச்சர் சிவசங்கர் பேட்டி
x
தினத்தந்தி 9 Sept 2023 12:00 AM IST (Updated: 9 Sept 2023 12:00 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் முதற்கட்டமாக மின்சார பஸ்கள் இயக்கப்படும் எனவும், தமிழகத்துக்கு புதிதாக 4 ஆயிரம் பஸ்கள் விரைவில் வாங்கப்பட உள்ளதாகவும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

புதுக்கோட்டை

மின்சார பஸ்கள்

புதுக்கோட்டையில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னையில் முதற்கட்டமாக மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதற்காக 100 பஸ்கள் வாங்க டெண்டர் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் டெண்டர் விடப்பட்டு பஸ்கள் வாங்கப்படும். சென்னையை தொடர்ந்து படிப்படியாக மற்ற நகரங்களில் மின்சார பஸ்கள் இயக்கப்படும். போக்குவரத்து துறையில் காலிப்பணியிடங்கள் கணக்கிடப்பட்டு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 685 பேரை பணிக்கு எடுக்க ஆன்லைனில் விண்ணப்பம் பெறுவதற்காக பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்பிறகு மற்ற போக்குவரத்து கழகங்களில் காலிப்பணியிடங்கள் கணக்கிடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிதாக 4 ஆயிரம் பஸ்கள்

அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் அரசு பஸ்களில் கூட்டம் அதிகரித்துள்ளது. அரசு பஸ்களில் மாணவ-மாணவிகள் படிக்கட்டுகளில் தொங்கி செல்லக்கூடிய நிலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்க்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை அதிகமானதால் 4 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. 3 அல்லது 4 மாதத்திற்குள் புதிய பஸ்கள் வந்துவிடும். அரசு போக்குவரத்து கழகத்தில் பணி ஓய்வுபெற்றவர்கள் மற்றும் பணிக்காலத்தில் இறந்தவர்களுக்கு பணப்பலன்கள் வழங்கப்படாமல் இருந்த பிரச்சினை அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ஏற்பட்டது.

தி.மு.க. ஆட்சி அமைந்த பின்பு இதனை தீர்ப்பதற்கு ரூ.1,500 கோடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். கடந்த காலம் போல காத்திருக்காமல் ஓய்வு பெற்றால் பணப்பலன்கள் பெறும் வகையில் சூழல் விரைவில் அமைய உள்ளது.

நகர பஸ்கள்

பழைய பஸ்களில் அடித்தள சட்டம் சிறப்பாக இருந்த 1,500 பஸ்களில் மட்டும் புதிதாக கூண்டு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் நகர பஸ்களில் பயணிகள் வசதியுடன் பயணிக்கும் வகையில் 5 இருக்கைகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. புறநகர் பஸ்கள் மஞ்சள் நிறத்தில் வர்ணம் மாற்றப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டன. சென்னையில் 2,500 பஸ்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி முடிவுற்றுள்ளது. தொடர்ந்து மற்ற போக்குவரத்து கழகங்களில் விரிவுப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story