கோவையில் 4 ஆயிரம் போலீசார் குவிப்பு
பாபர் மசூதி இடிப்பு தினம் 6-ந் தேதி கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு கோவையில் 4 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
கோவை
பாபர் மசூதி இடிப்பு தினம் 6-ந் தேதி கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு கோவையில் 4 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
கார் வெடிப்பு சம்பவம்
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் ஜமேஷா முபின் என்ற வாலிபர் உயிரிழந்தார். விசாரணையில் அவர், கோவையில் பல இடங்களில் நாச வேலையில் ஈடபட திட்டமிட்ட தகவல் வெளியானது. உடனே தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. இதற்கிடையே மங்களூருவில் கடந்த மாதம் குக்கர் குண்டு வெடித்தது. இதில் தொடர்புடைய ஷாரிக், கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சுற்றித்திரிந்த தகவலும் வெளியானது. இது தொடர்பாக கோவை, மதுரை, நாகர்கோவிலில் கர்நாடக போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
போலீசார் குவிப்பு
இந்த நிலையில் வருகிற 6-ந் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக வழக்கத்தை விட தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கோவையில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகரில் 3 ஆயிரம் போலீசார், புறநகரில் 1,000 போலீசார் என மாவட்டம் முழுவதும் 4 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
அவர்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான கிராஸ்கட் ரோடு, காந்திபுரம், டவுன்ஹால் மற்றும் கடைவீதி பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வழியாக வரும் வாகனங்களையும் சோதனைக்கு உட்படுத்துகின்றனர்.
சோதனை தீவிரம்
இதேபோன்று காந்திபுரம் மத்திய பஸ் நிலையம், திருவள்ளுவர் பஸ் நிலையம், புறநகர் பஸ் நிலையம், சிங்காநல்லூர் பஸ் நிலையம், உக்கடம் பஸ் நிலையங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கோனியம்மன் கோவில், தண்டுமாரியம்மன் கோவில் உள்பட அனைத்து கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இது தவிர கோவை ரெயில் நிலையத்திலும், விமான நிலையத்திலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு போலீசார் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முக்கிய இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். மறுபுறம், வாகன சோதனையும் தீவிரமாக நடந்து வருகிறது.