சரக்கு வேனில் காய்கறி மூட்டைகளில் மறைத்து கடத்த முயன்ற 409 கிலோ கஞ்சா பறிமுதல்


சரக்கு வேனில் காய்கறி மூட்டைகளில் மறைத்து கடத்த முயன்ற 409 கிலோ கஞ்சா பறிமுதல்
x

ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு சரக்கு வேனில் காய்கறி மூட்டைகளில் மறைத்து கடத்த முயன்ற 409 கிலோ கஞ்சாவை புதுக்கோட்டை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை

தீவிர வாகன சோதனை

புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஆந்திர மாநில பதிவெண் கொண்ட சரக்கு வேன் ஒன்று சந்தேகத்திற்கிடமாக சுற்றியது தெரியவந்தது. இதையடுத்து அந்த சரக்கு வேனை மடக்கி பிடித்து சோதனை செய்ய மாவட்ட தனிப்பிரிவு அலுவலகம் மூலம் அவர் உத்தரவிட்டார்.

இதையடுத்து மாவட்டம் முழுவதும் அனைத்து சோதனை சாவடிகளிலும், முக்கிய இடங்களிலும் வாகன சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் போது நெடுஞ்சாலை ரோந்து போலீசாரும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

409 கிலோ கஞ்சா

இந்த நிலையில் புதுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அம்மாசத்திரம் பகுதியில் ஒரு பாலிடெக்னிக் கல்லூரி அருகே சந்தேகத்திற்கிடமாக வந்த அந்த சரக்கு வேனை மடக்கி போலீசார் சோதனையிட்டனர். அப்போது சரக்கு வேனில் இருந்த டிரைவர் மற்றும் அவருடன் இருந்தவரும் தப்பியோடினர். இதனால் போலீசார் மேலும் சந்தேகமடைந்தனர். சரக்கு வேனை சோதனையிட்ட போது அதில் காய்கறி மூட்டைகள் இருந்தது.

மேலும் அதனை அகற்றி முழுமையாக சோதனை நடத்திய போது கஞ்சா பண்டல்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் மொத்தம் 194 பண்டல்கள் இருந்தன. இதன் மொத்த எடை 409 கிலோ ஆகும். இதையடுத்து சரக்கு வேனையும், கஞ்சா பண்டல்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து புதுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடிக்கு கடத்த முயற்சி

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கஞ்சா பண்டல்களை சரக்கு வேனில் ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக கடத்தி செல்ல திருச்சி வழியாக புதுக்கோட்டைக்குள் வந்தது தெரியவந்தது. தப்பியோடிய 2 பேரும் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிந்தது. அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதற்கிடையில் சரக்கு வேனின் வாகன பதிவெண்ணை வைத்து விசாரித்ததில் அந்த வாகனத்தின் பதிவெண் உண்மையானது என்பது தெரிந்தது. மேலும் தப்பியோடிய 2 பேரின் செல்போன் எண்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அந்த செல்போன் எண் `ஆப்' செய்து வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி, தப்பியோடிய நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Next Story