41 நிமிடங்கள் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு


41 நிமிடங்கள் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 31 Aug 2023 12:15 AM IST (Updated: 31 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலத்தில் 41 நிமிடங்கள் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இதை தவிர்க்க ரெயில்வே மேம்பால பணிகளை விரைவில் தொடங்கிட வேண்டும் என அப்பகுதி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலத்தில் 41 நிமிடங்கள் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இதை தவிர்க்க ரெயில்வே மேம்பால பணிகளை விரைவில் தொடங்கிட வேண்டும் என அப்பகுதி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரெயில்வே கேட்

நீடாமங்கலம் ரெயில்வே கேட் நேற்று அதிகாலை சுமார் 4.50 மணிக்கு மூடப்பட்டது. அதனைத்தொடர்ந்து மன்னார்குடியிலிருந்து நெல் ஏற்றிய சரக்கு ரெயில் முதலாவது நடைமேடைக்கு வந்து நின்றது. சரக்கு ரெயிலின் என்ஜின் திசை மாற்ற பிரிக்கப்பட்டது.

தொடர்ந்து சென்னையிலிருந்து மன்னார்குடி செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில் இரண்டாவது நடைமேடையில் வந்து நின்றது. பயணிகள் இறங்கிய பின் மன்னார்குடிக்கு புறப்பட்டுச்சென்றது.

41 நிமிடங்கள்

அதனைத்தொடர்ந்து வேளாங்கண்ணியில் இருந்து திருச்சி செல்லும் சிறப்பு ரெயில் சென்றது. தொடர்ந்து ரெயில்கள் வந்து சென்றதால் காலை 4.50 மணிக்கு மூடப்பட்ட ரெயில்வே கேட் 5.30 மணிவரை திறக்கப்படவில்லை. மேலும் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் வருகை குறித்து ரெயில்நிலையம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இருப்பினும் காலை 5.31 மணிக்கு ரெயில்வே கேட் திறக்கப்பட்டது.

சுமார் 41 நிமிடங்கள் ரெயில்வேகேட் மூடப்பட்டிருந்ததால் நீடாமங்கலத்தில் நெடுஞ்சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இதன்காரணமாக பஸ் பயணிகள், வாகன ஓட்டிகள், வியாபாரிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். மேலும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. இந்த அவலநிலையை போக்கிட நீடாமங்கலம் மேம்பாலம் திட்ட பணிகளை தொடங்கிடவும், தஞ்சையிலிருந்து நாகப்பட்டினம் வரையிலான இருவழிச்சாலை திட்டத்தை விரைவு படுத்திடவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story