மதுவிற்ற 41 பேர் கைது


மதுவிற்ற 41 பேர் கைது
x

நாமக்கல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுவிற்ற 41 பேரை போலீசார் கைது செய்தனர். 540 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

நாமக்கல்

மகாவீர் ஜெயந்தி

மகாவீர் ஜெயந்தியையொட்டி நேற்று அரசு மதுபான கடைகளை மூட மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவிட்டு இருந்தார். மதுபான விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த உத்தரவை மீறி யாராவது சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபடுகிறார்களா? என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைசெல்வன் உத்தரவின்பேரில் மதுவிலக்கு போலீசாரும், உள்ளூர் போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த கண்காணிப்பின் போது பெட்டிக்கடைகள், சந்து பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 39 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து 480 மதுபாட்டில்கள் மற்றும் ஒரு மொபட் பறிமுதல் செய்யப்பட்டன.

மதுபாட்டில்கள் பறிமுதல்

இதேபோல் நாமக்கல் மாவட்டம், கே.புதுப்பாளையம் அருகே உள்ள வள்ளியப்பம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணன் (வயது 47). இவர் வீட்டிற்கு முன்பு உள்ள கடையில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரில் அங்கு சென்ற போலீசார் திடீரென சோதனை மேற்கொண்டனர். இதில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். சட்ட விரோதமாக மது விற்ற ராஜேஷ்கண்ணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம், உரம்பூர் பஸ் நிறுத்தம் அருகே சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்த கணேசன் (32) என்பவரை வேலூர் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story