திருவள்ளூர் மாவட்டத்தில் 'லோக் அதாலத்' மூலம் 4,162 வழக்குகளுக்கு தீர்வு


திருவள்ளூர் மாவட்டத்தில் லோக் அதாலத் மூலம் 4,162 வழக்குகளுக்கு தீர்வு
x

‘லோக் அதாலத்’ நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் நடைபெற்று 4,162 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

திருவள்ளூர்

லோக் அதாலத்

திருவள்ளூர் மாவட்டத்தில் லோக் அதாலத் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக திருவள்ளூர், பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி, அம்பத்தூர், திருவெற்றியூர், பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி மற்றும் மாதவரம் தாலுகா கோர்ட்டுகளில் நடைபெற்றது. இதில் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், காசோலை வழக்குகள், குற்றவியல் வழக்குகள் மற்றும் நிலுவையில் அல்லாத வங்கி வழக்குகள் சமரசம் பேசி முடிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 21 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டது.

திருவள்ளூரில் நேற்று நடைபெற்ற லோக் அதாலத் நிகழ்ச்சியை முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான எஸ்.செல்வ சுந்தரி தொடங்கி வைத்தார். இதில் மகளிர் கோர்ட்டு மாவட்ட நீதிபதி சுபத்திரா தேவி, குடும்ப நல கோர்ட்டு மாவட்ட நீதிபதி வித்யா, தலைமை குற்றவியல் கோர்ட்டு நீதிபதி ஆர்.வேலாராஸ், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் மூத்த உரிமையியல் நீதிபதி பி.வி.சாண்டில்யன், முதன்மை மாவட்ட முன்சீப் நீதிபதி பிரியா, குற்றவியல் கோர்ட்டு நீதித்துறை நடுவர்கள் முகழாம்பிகை, சத்திய நாராயணன், செல்வ அரசி, பவித்ரா மற்றும் மூத்த வக்கீல் சீனிவாசன், வங்கி அலுவலர்கள், கோர்ட்டு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

4,162 வழக்குகளுக்கு தீர்வு

இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள 7,460 வழக்குகளில் 4,020 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.18 கோடி 62 லட்சம் 84 ஆயிரத்து 980 தொகைக்கு தீர்வு காணப்பட்டது. பின்னர் நிலுவையில் அல்லாத 142 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுக்கப்பட்டு 142 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.1 கோடியே 36 லட்சத்து 57 ஆயிரத்து 39 தொகைக்கு தீர்வு காணப்பட்டது. மொத்தம் 4,162 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.19 கோடி 99 லட்சத்து 42 ஆயிரத்து 19 தொகைக்கு தீர்வு காணப்பட்டது.


Next Story