ரேஷன் அரிசி கடத்திய 437 பேர் கைது


ரேஷன் அரிசி கடத்திய 437 பேர் கைது
x
தினத்தந்தி 10 July 2023 1:15 AM IST (Updated: 10 July 2023 1:16 AM IST)
t-max-icont-min-icon

கடந்த ஆண்டில் பொள்ளாச்சி வழியாக கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்திய 437 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

கடந்த ஆண்டில் பொள்ளாச்சி வழியாக கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்திய 437 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரேஷன் அரிசி கடத்தல்

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை ஐ.ஜி. காமினி உத்தரவின்பேரில் கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி அறிவுறுத்தலின்பேரில் கோவை சரக துணை சூப்பிரண்டு கிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலைசெல்வன், சசிகலா ஆகியோர் கொண்ட குழுவினர் வாளையாறு, வேலாந்தவளம், செம்மனாம்பதி, நடுப்புணி, மீனாட்சிபுரம், கோபாலபுரம், கோவிந்தாபுரம், வீரப்பகவுண்டனூர், வடக்குகாடு, ஜமீன்காளியாபுரம் பகுதிகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பொள்ளாச்சி பகுதி வழியாக ரேஷன் அரிசி கடத்தும் நபர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஓராண்டில் 419 வழக்குகள்

இதுகுறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

தமிழக-கேரள எல்லைகளில் தீவிர வாகன தணிக்கை காரணமாக ரேஷன் அரிசி கடத்தல் குறைந்து உள்ளது. கடத்தல் வழித்தடங்கள், ஆளில்லா சோதனை சாவடிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் கடந்த 30-ந்தேதி வரை 419 ரேஷன் அரிசி கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 577 கிலோ(206 டன்) ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கடத்தலுக்கு பயன்படுத்திய 182 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 437 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

குண்டர் சட்டம்

மேலும் கடத்தலுக்கு உதவியாக இருந்த ரேஷன் கடை ஊழியர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. கேரளாவுக்கு கடத்திய 3 பேர் மீது கள்ளச்சந்தை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதனால் பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துதல் 90 சதவீதம் வரை குறைந்து உள்ளது. ரேஷன் அரிசி கடத்துவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Related Tags :
Next Story