44,250 மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் பதிவு


44,250 மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் பதிவு
x

வேலூர் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக 2 நாட்கள் நடந்த முகாமில் 44,250 குடும்ப அட்டைதாரர்களின் மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர்

மகளிர் உரிமை தொகை

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந் தேதி செயல்படுத்தப்பட உள்ளது. இதையொட்டி குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 397 முகாம்களில் 3,02,447 குடும்ப அட்டைகளின் விண்ணப்பங்கள் கடந்த மாதம் 24-ந் தேதி முதல் கடந்த 4-ந் தேதி வரை பதிவு செய்யும் பணி நடந்தது. இந்த முகாம்களில் 2,04,466 குடும்ப அட்டைதாரர்களின் மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வேலூர் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக 281 முகாம்களில் 1,51,495 குடும்ப அட்டைகளின் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. முதல்நாளில் 20,118 பேர் முகாமிற்கு சென்று தங்களின் விண்ணப்பங்களை பதிவு செய்தனர். இந்த நிலையில் 2-ம் நாளாக நேற்று 281 முகாம்களில் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன.

44,250 விண்ணப்பங்கள் பதிவு

இந்த முகாம்களில் குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் சென்று விண்ணப்பம் மற்றும் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம், மின்வாரிய ரசீது ஆகியவற்றை வழங்கி பதிவு செய்து கொண்டனர். இதனை அந்தந்த பகுதி தாசில்தார், வட்ட வழங்கல் அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நேற்று நடந்த முகாமில் 24,132 குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்தனர்.

வேலூர் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக 2 நாட்கள் நடந்த முகாமில் 44,250 பேரின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டது. 2-ம் கட்ட முகாம் வருகிற 16-ந் தேதி வரை நடைபெற உள்ளது. குறிப்பிட்ட நாளில் விண்ணப்பம் பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்கள் பதிவு செய்வதற்காக வருகிற 15,16-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது என்று வழங்கல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story