அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 45 பவுன் நகைகள்-பணம் திருட்டு
அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 45 பவுன் நகைகள்-பணம் திருட்டு போனது.
அரசு பள்ளி ஆசிரியை
திருச்சி கே.கே.நகர் கே.சாத்தனூர் வடுகபட்டி பிரேம்நகரை சேர்ந்தவர் செல்லதுரை. போலீஸ்காரராக பணியாற்றி வந்த இவர், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருடைய மனைவி சிந்தாமணி (வயது 47). இவர் சின்ன சூரியூரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
இவர்களின் மகன் ரோகித் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு துறையூரில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சிந்தாமணி துறையூர் சென்றுவிட்டார். விடுமுறைக்கு திருச்சி வந்திருந்த ரோகித் கடந்த 17-ந்தேதி நள்ளிரவில் வீட்டை பூட்டிவிட்டு சென்னைக்கு புறப்பட்டு சென்றுவிட்டார்.
45 பவுன் நகை-பணம் திருட்டு
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை சிந்தாமணியின் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதை அந்த பகுதியில் வசிக்கும் சிந்தாமணியின் உறவினர் ஒருவர் பார்த்து, அவருக்கு தகவல் கொடுத்தார். இதைத்தொடா்ந்து மாலையில் அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டில் பீரோவில் வைத்திருந்த 45 பவுன் நகைகள், ரூ.20 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தன.
உடனே இதுபற்றி கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். கே.கே.நகர் சரக உதவி போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
விசாரணையில், வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து நகை-பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு திருடர்கள் விட்டுச்சென்ற தடயங்களை போலீசார் சேகரித்தனர்.
மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.