போலீஸ் ஏட்டு வீட்டில் 45 பவுன் நகை கொள்ளை


போலீஸ் ஏட்டு வீட்டில் 45 பவுன் நகை கொள்ளை
x

வள்ளியூரில் போலீஸ் ஏட்டு வீட்டில் 45 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூரில் போலீஸ் ஏட்டு வீட்டில் 45 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

போலீஸ் ஏட்டு

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது 37). இவர் கூடங்குளம் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி மணிமாலா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு அருண்குமார் கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் நடந்த கோவில் கொடை விழாவையொட்டி, அங்குள்ள உறவினரின் வீட்டுக்கு குடும்பத்தினருடன் சென்றார்.

45 பவுன் நகை கொள்ளை

நேற்று மாலையில் அருண்குமார் குடும்பத்தினருடன் தனது வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டில் உள்ள அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதில் இருந்த 45 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து வள்ளியூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். கொள்ளை நடந்த வீட்டில் பதிவான தடயங்களை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

அருண்குமாரின் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், நள்ளிரவில் அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து திறந்து உள்ளே நுழைந்தனர். பின்னர் அங்கிருந்த பீரோவை உடைத்து திறந்து, அதில் இருந்த 45 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும், வழக்குப்பதிவு செய்து, ஏட்டு வீட்டில் நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

வள்ளியூரில் ஏட்டு வீட்டில் கதவை உடைத்து மர்மநபர்கள் துணிகரமாக நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story