நீதிபதி வீட்டில் 450 பவுன் கொள்ளை வழக்கு: 7 ஆண்டுகளுக்கு பிறகு அடையாளம் காணப்பட்ட வெளிமாநில கொள்ளையன்


நீதிபதி வீட்டில் 450 பவுன் கொள்ளை வழக்கு: 7 ஆண்டுகளுக்கு பிறகு அடையாளம் காணப்பட்ட வெளிமாநில கொள்ளையன்
x

சென்னை நீதிபதி வீட்டில் 450 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 7 ஆண்டுகளுக்கு பிறகு வெளிமாநில கொள்ளையன் அடையாளம் காணப்பட்டான்.

சென்னை

சென்னை சைதாப்பேட்டை நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள ஒரு நீதிபதி வீட்டில் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 11-ந்தேதி அன்று 450 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது. இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பல்வேறு தனிப்படைகள் அமைத்தும் கொள்ளையர்களை அடையாளம் கண்டு கைது செய்ய முடியவில்லை. சென்னை கைரேகை பிரிவு போலீசார் கொள்ளை நடந்த வீட்டில் பதிவான கைரேகைகளை தமிழ்நாட்டில் கொள்ளை சம்பவங்களில் கைதான நபர்களின் ரேகையுடன் ஒப்பிட்டு பார்த்தும் ஏமாற்றமே மிஞ்சியது.

இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் கடந்த ஆண்டு வந்தது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடித்தது. தேசிய விரல் ரேகை பதிவு கூடத்தின் மென்பொருள் உதவியுடன் விரல் ரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் மேசையா அருள்ராஜ், வினோத் ஆகியோர் வெளிமாநிலங்களை சேர்ந்த கொள்ளையர்களின் கைரேகைகளை ஒப்பிட்டு பார்த்தனர்.

இதில் கொள்ளை நடந்த நீதிபதி வீட்டில் பதிவான கைரேகை வெளிமாநில கொள்ளையன் ஒருவரின் கைரேகையுடன் ஒத்து போனது. அந்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

7 ஆண்டுகளாக துப்பு கிடைக்காத வழக்கில் குற்றவாளியை அடையாளம் காண உதவிய விரல் ரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் மேசையா அருள்ராஜ், வினோத் ஆகிய 2 பேரையும் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று நேரில் வரவழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

மதுரவாயல் பகுதியில் கடந்த 10-ந்தேதி அன்று அடுத்தடுத்து 3 டீக்கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இந்த வழக்கில் துரித விசாரணை நடத்தி குற்றவாளியை கைது செய்த விரல் ரேகைப்பதிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பஞ்சாட்சரம், மதுரவாயல் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் எஸ்.சுதாகர், போலீஸ்காரர்கள் தசரதன், சக்திவேல் ஆகியோரையும், எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் கைதிக்கு கஞ்சா கொடுத்த 3 நபர்களை கைது செய்த போலீஸ்காரர் கோட்ராஜ் ஆகியோருக்கும் வெகுமதி வழங்கி கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டினார்.


Next Story