45-வது பிறந்தநாள்: பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை
உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தனது 45-வது பிறந்தநாளையொட்டி பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று நேற்று மரியாதை செலுத்தினார்.
சென்னை,
தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது 45-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி தனது தந்தையும், தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து, கட்டிப்பிடித்து, கன்னத்தில் முத்தமிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். துர்கா ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியின்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தயாநிதி மாறன் எம்.பி. உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை
அதன் பின்னர் உதயநிதி ஸ்டாலின் மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அப்போது அமைச்சர்கள் பெரியகருப்பன், சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன், செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அதனைத்தொடர்ந்து திருவல்லிக்கேணி பம்பிங் ஸ்டேஷன் குடியிருப்பு பகுதியில் இலவச மருத்துவ முகாமை உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் ஏராளமான இளம்பெண்கள் உதயநிதி ஸ்டாலினுடன் 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்.
நலத்திட்ட உதவிகள்
பின்னர் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி ரத்த வங்கிக்கு தேவையான உபகரணங்களை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். திருவல்லிக்கேணி வி.ஆர்.பிள்ளை தெரு சமுதாய நலக்கூடத்தில் இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள கைலாசபுரத்தில் தி.மு.க. கொடியை ஏற்றி வைத்தார். மரக்கன்று நட்டதுடன், ஏழை-எளியோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
அதன் பின்னர் தேனாம்பேட்டையில் உள்ள அன்பகம் வளாகத்துக்கு உதயநிதி ஸ்டாலின் சென்றார். அங்கு அவருக்கு தி.மு.க. இளைஞர் அணி-மாணவர் அணி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத்தொடர்ந்து கேக் வெட்டி உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடினார். பின்னர் நிர்வாகிகள், தொண்டர்களின் பிறந்தநாள் வாழ்த்துகளை அவர் ஏற்றார்.
நிர்வாகிகள் வாழ்த்து
அமைச்சர் துரைமுருகன், முன்னாள் மத்திய மந்திரி எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி., தி.மு.க. வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் ஆகியோர் உதயநிதி ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அமைச்சர்கள் பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், வி.செந்தில் பாலாஜி, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், கீதா ஜீவன், மதிவேந்தன், தி.மு.க. இளைஞர் அணி துணை செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் உள்பட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர்.
உதயநிதி ஸ்டாலின் பேட்டி
அதனைத்தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் எனது பிறந்தநாளையொட்டி ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை தி.மு.க.வினர் வழங்கி வருகிறார்கள். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எப்போதுமே மக்கள் பணிதான் இலக்கு. அதை மனதில் வைத்துதான் கட்சி பணியாற்றி கொண்டிருக்கிறேன். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் அனைத்து தொகுதிகளிலும் திராவிட மாடல் பாசறை கூட்டங்கள் முடித்திருக்கிறோம். விரைவில் கிளை அளவில் நடத்தவுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ.க.வை தாக்கி பேச...
அதனைத்தொடர்ந்து, 'சட்டமன்ற தேர்தலில் செங்கல் வைத்து பிரசாரம் செய்தீர்கள். வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் என்ன மாதிரியான பிரசாரத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளீர்கள்?' என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ''இன்னும் யோசிக்கவில்லை. ஆனால் பா.ஜ.க.வை தாக்கி பேச நிச்சயம் ஒரு 'கண்டெண்ட்' கிடைக்கும்'', என்று அவர் பதில் அளித்தார்.
உதயநிதி ஸ்டாலினை அவரது இல்லத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, சி.வெ.கணேசன், தி.மு.க. தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முரளி ராமநாராயணன் உள்ளிட்ட பலரும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்பட பலரும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, சென்னை கஸ்தூரிபா அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலக்குழு தலைவர் எஸ்.மதன்மோகன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் பங்கேற்று ஆஸ்பத்திரியில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினர்.
அதேபோல சென்னை திருவல்லிக்கேணியில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதில் அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்று, 100 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் பொற்கிழியை வழங்கினார்.