4-ம் ஆண்டு நினைவு தினம்; துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி


4-ம் ஆண்டு நினைவு தினம்; துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி
x

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

துப்பாக்கி சூடு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.

அப்போது நடந்த கலவரத்தால் போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தின் 4-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது.

பொதுமக்கள் அஞ்சலி

அதன்படி அ.குமரெட்டியபுரம், தாளமுத்துநகர், லயன்ஸ்டவுன், பாத்திமா நகர் உள்பட மாநகரின் பல்வேறு பகுதிகளில் அலங்கரித்து வைக்கப்பட்ட 13 பேரின் உருவப்படங்களுக்கு பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களின் கல்லறைகளுக்கு சென்று உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். கல்லறைகளில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களும் அஞ்சலி செலுத்தி உறுதிமொழியும் ஏற்றனர். ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு கிருஷ்ணமூர்த்தி, மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

68 பேர் கைது

இதேபோன்று தூத்துக்குடி மாநகராட்சி பொது மையவாடியில் போராட்டத்தில் இறந்த கார்த்திக் உள்ளிட்டவர்களின் கல்லறையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர் அரிராகவன் தலைமையில் இறந்தவர்களின் உறவினர்கள், கூட்டமைப்பினர் ஊர்வலமாக சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து உறுதிமொழி ஏற்றனர்.

அதன்பிறகு சி.பி.ஐ.யின் இறுதி குற்றப்பத்திரிகையை தூத்துக்குடி மக்கள் நிராகரிக்கிறோம். ஐகோர்ட்டு கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் கொண்ட நேர்மையான விசாரணை நடத்த வேண்டும். துப்பாக்கி சூட்டுக்கு காரணமான சூழல் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தொடர்ந்து சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை நகலை கிழித்து போராட்டம் நடத்தினர். பின்னர் மெயின் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ் சூப்பிரண்டுகள் பாலாஜி சரவணன், ஜெயக்குமார் தலைமையிலான போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 68 பேரை கைது செய்தனர். அப்போது அவர்களுக்கு இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது.

பாதுகாப்பு

மேலும் துப்பாக்கி சூடு நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் மேற்பார்வையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டனர். 5 போலீஸ் சூப்பிரண்டுகள், 9 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 18 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 127 இன்ஸ்பெக்டர்கள், 220 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட சுமார் 2 ஆயிரத்து 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஸ்டெர்லைட் நிறுவனம் முன்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வஜ்ரா வாகனம், தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வாகனம், கண்ணீர் புகைகுண்டு வீசும் வாகனம் உள்ளிட்டவையும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.


Next Story