திருவண்ணாமலையில் மூக்கு பொடி சித்தர் 4-ம் ஆண்டு குரு பூஜை விழா


திருவண்ணாமலையில் மூக்கு பொடி சித்தர் 4-ம் ஆண்டு குரு பூஜை விழா
x

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் மூக்கு பொடி சித்தர் 4-ம் ஆண்டு குரு பூஜை விழா நடந்தது.

திருவண்ணாமலை

மூக்குபொடி சித்தர் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலைக்கு வந்து தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தவர். கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் புயலால் சேதமாகும் என்பதையும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் முன்கூட்டியே கணித்தவர் என்று கூறப்படுகிறது. இவர் ஓரிடத்தில் தங்காமல் அடிக்கடி வேறு, வேறு இடங்களில் தங்கி வந்தார். நினைவு தெரிந்து சித்தர் குளிப்பதே இல்லை எனவும், ஆனால் அவருடைய உடலில் இருந்து நறுமண வாசனை வருவதாகவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

சித்தரின் பார்வை பட்டாலே நல்லது நடக்கும் என பக்தர்கள் நம்பினர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அரசியல் பிரபலங்கள் மூக்கு பொடி சித்தரின் பக்தர்களாக இருந்தனர். மூக்கு பொடி சித்தர் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில் முக்தி அடைந்தார். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் வாயுலிங்கம் அருகில் அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மூக்கு பொடி சித்தர் ஆசிரமத்தில் மூக்கு பொடி சுவாமி அறக்கட்டளை சார்பில் 4-ம் ஆண்டு குரு பூஜை விழா நடைபெற்றது. இதையொட்டி கணபதி பூஜை, குரு பூஜை, மகேஷ்வர பூஜை நடைபெற்றது. பிறகு சாதுகளுக்கு வஸ்திரதானம், ஆடைதானம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த பூஜையில் போலீஸ் ஏ.டி.ஜி.பி. ஜெயராமன், நடிகர் தாடி பாலாஜி, திருவண்ணாமலை ஆகாஷ் ஓட்டல் அதிபர் முத்துக்கிருஷ்ணன் உள்பட அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை மூக்குப் பொடி சுவாமி அறக்கட்டளை நிறுவனர் ஏ.துரை மற்றும் நிர்வாகிகள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


Next Story