தமிழகத்தில் 56 கி.மீ. தூரம் நடந்தார்: செண்டை மேளத்துடன் ராகுல்காந்தி 4-வது நாளாக பாதயாத்திரை;வழிநெடுகிலும் பெண்கள் 'செல்பி' எடுத்து உற்சாகம்


தமிழகத்தில் 56 கி.மீ. தூரம் நடந்தார்: செண்டை மேளத்துடன் ராகுல்காந்தி 4-வது நாளாக பாதயாத்திரை;வழிநெடுகிலும் பெண்கள் செல்பி எடுத்து உற்சாகம்
x

தமிழகத்தில் ராகுல்காந்தி 56 கி.மீ. தூரம் நடந்தார். குமரியில் 4-வது நாளாக நேற்று செண்டை மேளத்துடன் அவர் பாதயாத்திரை மேற்கொண்டார். வழிநெடுகிலும் பெண்கள் ‘செல்பி' எடுத்து உற்சாகம் அடைந்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

தமிழகத்தில் ராகுல்காந்தி 56 கி.மீ. தூரம் நடந்தார். குமரியில் 4-வது நாளாக நேற்று செண்டை மேளத்துடன் அவர் பாதயாத்திரை மேற்கொண்டார். வழிநெடுகிலும் பெண்கள் 'செல்பி' எடுத்து உற்சாகம் அடைந்தனர்.

4-வது நாள் பாதயாத்திரை

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. 'பாரத் ஜோடோ யாத்ரா' என்ற பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு மேற்கொண்டு வருகிறார். 150 நாட்களில் 3,570 கி.மீ. தூரம் நடந்தே சென்று காஷ்மீரை அடைய உள்ள இந்த யாத்திரையை கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை அவரிடம் வழங்கி யாத்திரையை தொடங்கி வைத்தார்.

நேற்றுமுன்தினம் 3-வது நாள் பாதயாத்திரையை அழகியமண்டபம் சந்திப்பில் முடித்த அவர் அன்று இரவு முளகுமூடு செயின்ட் மேரீஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் கேரவனில் தங்கி ஓய்வெடுத்தார். 4-வது நாள் யாத்திரையை அவர் நேற்று காலை 7.05 மணிக்கு அங்கிருந்து தொடங்கினார். ஒவ்வொரு நாளும் ராகுல்காந்தி தேசியக்கொடியை ஏற்றி பாதயாத்திரையை தொடங்கினார். அதேபோல் நேற்றும் பள்ளி வளாகத்தில் தேசியக்கொடியை ஏற்றினார்.

பாதயாத்திரையை தொடங்குவதற்கு முன்பு ராகுல்காந்தி பள்ளி குழந்தைகளுடன் கலந்துரையாடியதுடன், சிறு குழந்தைகளை கொஞ்சியும் மகிழ்ந்தார். பின்னர் அவர்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

வழிநெடுகிலும் கூட்டம்

யாத்திரை புறப்பட்டதும் முதலில் வெள்ளை சீருடையுடன் தேசிய கொடியை ஏந்தியவாறு பாதயாத்திரை குழுவினர் முன் சென்றனர். அவர்களுடன் மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரி திக்விஜய் சிங்கும் நடந்து சென்றார். தொடர்ந்து செண்டை மேளம் முழக்கத்துடன் செல்ல, அதனை தொடர்ந்து ராகுல்காந்தி நடைபயணத்தை மேற்கொண்டார். இதில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ், புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, தமிழக முன்னாள் மாநில தலைவர் கே.வி.தங்கபாலு, எம்.பி.க்கள் விஜய் வசந்த், ஜோதிமணி, திருநாவுக்கரசர், எம்.எல்.ஏ.க்கள் செல்வபெருந்தகை, ராஜேஷ் குமார், பிரின்ஸ், விஜய தரணி, ரூபி மனோகரன், காங்கிரஸ் மாநில துணைத்தலைவர்கள் கோபண்ணா, ராபர்ட் புரூஸ், மாவட்ட தலைவர் கே.டி.உதயம், நவீன்குமார், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் டைசன், மாநகராட்சி மண்டல தலைவர் செல்வக்குமார் ஆகியோரும் உடன் வந்தனர்.

ராகுல்காந்தி பாதயாத்திரையை வரவேற்பதற்காக வழிநெடுகிலும் சாலையின் இருபுறமும் கட்சியின் கொடி தோரணங்கள், வரவேற்பு பேனர்கள், பேட்ஜ் வடிவிலான பேனர்கள் வரிசையாக கட்டப்பட்டு இருந்தன. கடந்த 3 நாட்களைக் காட்டிலும் 4-வது நாளான நேற்று ராகுல்காந்தியை காண காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

மாடியில் இருந்தும்...

இதில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், விளையாட்டு வீரர்- வீராங்கனைகள், பல்வேறு கலைஞர்கள் என ஏராளமானோர் வழி நெடுகிலும் திரண்டு நின்று ராகுல் காந்திக்கு வரவேற்பு அளித்தனர்.

வீடுகளின் முன்பும், மாடிகளில் இருந்தும் பெண்கள், குழந்தைகள் ராகுல் காந்தியை ஆர்வமாக பார்த்ததை காண முடிந்தது. மேலும் ராகுல் காந்திக்கு செண்டை மேளங்கள், சிங்காரி மேளங்கள், மயிலாட்டம், ஒயிலாட்டங்களுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆர்வமுடன் 'செல்பி'

காங்கிரஸ் தொண்டர்கள் கட்சி கொடியை கையில் ஏந்தியபடி வரவேற்றனர். பாதயாத்திரையின் போது ராகுல்காந்தி தொண்டர்களை பார்த்து கை அசைத்தவாறு நடந்து சென்றார். பெண்களை பார்த்து கைகூப்பி வணங்கினார்.

சில இடங்களில் பாதுகாப்பு வளையத்தையும் தாண்டிச் சென்று ராகுல் காந்தி சிலருடன் செல்பியும், புகைப்படமும் எடுத்துக் கொண்டார். மேலும் மாணவ, மாணவிகள் சிலர் ராகுல்காந்தியின் அருகில் சென்று அவரிடம் ஆர்வமாக பேசியதையும் காண முடிந்தது.

முளகுமூட்டில் தொடங்கிய பாதயாத்திரை கல்லுவிளை, வெள்ளிகோடு, காட்டாத்துறை, சாமியார் மடம், புலிப்புனம், சிராயன்குழி, காஞ்சிரக்கோடு, சாங்கை, பம்மம் வழியாக மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரியை சென்றடைந்தது. காலை 7.05 மணிக்கு தொடங்கிய இந்த நடைபயணம் 9.10 மணிக்கு மார்த்தாண்டத்தை வந்தடைந்தது. நேற்றும் ராகுல்காந்தி உற்சாகத்தோடும், உத்வேகத்தோடும், வேகமாகவும் நடைபயணத்தை மேற்கொண்டார். சுமார் 2 மணி நேரத்தில் அவர் 10 கி.மீ. தூரத்தை கடந்தார்.

குமரியில் நிறைவு செய்தார்

மதியம் ஓய்வுக்கு பிறகு நேற்று மாலை 4.40 மணிக்கு அவர் மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரியில் இருந்து நடைபயணத்தை மீண்டும் தொடங்கினார். குழித்துறை சந்திப்பு, படந்தாலுமூடு சந்திப்பு வழியாக மாலையில் ராகுல்காந்தி தலைச்சன்விளை சந்திப்புக்கு 6.55 மணிக்கு வந்தடைந்தார். அத்துடன் நேற்றைய பாதயாத்திரை முடிவடைந்தது.

பின்னர் அங்கிருந்து அவர் காரில் புறப்பட்டு கேரள மாநிலத்தில் நடை பயணம் மேற்கொள்ள பாறசாலை அருகில் உள்ள செருவாரகோணம் எல்.எம்.எஸ். பள்ளிக்குச் சென்று இரவில் தங்கினார்.

குமரி மாவட்டத்தில் 4 நாட்கள் பாதயாத்திரையை நிறைவு செய்த ராகுல்காந்தி சுமார் 56 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றதாக காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story